Thursday, June 29, 2006

காலத்தை வென்ற மெட்டுக்கள்

"கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணுக்கு தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை" ---- வானம்பாடி

மீராவைப் போல ஒருவரை இந்த அளவுக்கு எப்படிக் காதலிக்க முடியும் என்று வாதாடிக் கொண்டிருந்த எனக்கு, அப்படி ஒரு காதலை அறிமுகப்படுத்திய ஒரு இனிமையான பாடல். உள்ளத்தை தொலைத்துவிட்டு, உணர்வுகளில் மட்டுமே அவள் தேடிக் கொண்டிருந்த கண்ணன். காதலின் நினைவுகளில் உறைந்து இருக்கும் இவளின் உயிரைத் அவனது கீதம் தொட்டவுடன், ஒரு முறை அவன் முகம் பார்க்க மாட்டேனா என்று தவிக்கும் பெண்மையை இதைவிட அழகாக சொல்ல முடியாது.

காதலில் கலந்த இருவரின் உள்ளம் தயக்கம் இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ள தனிமை தேவை. அந்த தனிமை இருவரின் இடையில் பேசிய கவிதை இதோ

"ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே" ---- கர்ணன்

எல்லா ஆழமான உறவும் ஒரு பிரிவை சந்தித்து இருக்கும்.. இப்படி பிரிந்து இருக்கும் காலத்தில் நமக்கும் ஏற்படும் வலி, நமக்குள் பிறந்த காதலை நமக்கே அறிமுகம் செய்யும். இந்த வேதனையை சொல்ல எத்தனையோ பாடல்கள் உண்டு.. என் நினைவில் என்றும் இருக்கும் சில பாடல்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள..

"தன் உயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை
என் உயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
நான் என் உயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்" ---- தாழம்பூ

"பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன் சிந்தை வாடலாணேன்
தூது செல்லும் யாரும் சேதி சொல்ல காணேன்" ---- மன்னாதி மன்னன்

"மலருக்கு தென்றல் பகையானால்
அது மலர்ந்திட கதிரவன் துணை உண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேரே வழி ஏது!!" ---- எங்க வீட்டு பிள்ளை

இப்படி நிறைய பாடல்கள், சொல்ல நாட்கள் போதாது. கண்ணதாசன் அவர்களின் பாடகளை கேட்டுக் கொண்டிருந்தால் தமிழின் மீது ஒரு காதலே வந்துவிடும்..

"அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை" ---- புதிய பறவை

அன்றே சகுந்தலைக்கு கண்ணதாசனைத் தெரிந்திருந்தால் அவள் காதலை நினைவூட்ட மோதிரம் தேவைப்பட்டிருக்காது.

இதயம் கலந்து, கனவுகள் சுமக்கும் ஒரு பெண், தன் மணநாள் வேண்டி காத்திருக்கும் வேளையில் அவளை வாழ்த்தி பாட உறவுகள்தான் தேவையா... வளையல்காரன் கூட வாழ்த்துகிறான்

"கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா.. பூவோடு வருமே பொட்டோடு வருமே
சிங்கார சின்ன வளையல்" ---- படகோட்டி

தோழிகள் கூடி, புத்தாடை உடுத்தி, அழகாக அலங்கரித்து, கேலிகளில் சிரித்து, காதோடு அறிவுரை சொல்ல வந்த பாடல்..

"வருவார் வருவார் பக்கம்
உனக்கு வருமே வருமே வெட்கம்
தருவார் தருவார் நித்தம்
இதழ் தித்திக்க தித்திக்க ....

யாரோ சொன்னார் கேட்டேன்
நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்
நானாய் சொன்னது பாதி
இனி தானாய் தெரியும் மீதி:" ---- கற்பகம்

காதல் வந்ததும், மணநாள் கண்டதும்.. இனி அவளுக்குள் ஒரு புது மோகம்.. தாய்மையைத் தொட்டுவிட

"மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளி போல்
பிள்ளை உருவானதே" ---- கர்ணன்

தன் நினைவுகளில் அவள் வரைந்து வைத்த பிள்ளை ஓவியம் இன்று தன் மடியில் தவழ்ந்திட, முன்னூறு நாள் தவம் இருந்து அவள் பேச நினைத்த அத்தனையும் தாலாட்டாய் ஒலித்திடும்

''இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
ஒரு பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்" ---- நீதிக்கு தலை வணங்கு

"காலமிது காலம் இது
கண் உறங்கு மகளே
காலம் இதை தவற விட்டால்
தூக்கம் இல்லை மகளே" ---- சித்தி

பாடலில் கதை சொல்வதும் அதையும் அழுத்தி சொல்வது ஒரு கலை..

"தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா?
தெருவினிலே விழுந்தாலும்
வேரோர் கை தொடலாமா?" ---- நெஞ்சில் ஓர் ஆலயம்

"காற்றில் உதிர்ந்த வண்ண மலர்
கண்ணீர் சிந்தும் சின்ன மலர்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா....

அலையில் மிதந்த மலர் கண்டு
அதன் மேல் கருனை மனம் கொண்டு
தலையில் இறைவன் சூடிக் கொண்டான்
தானே அதனை சேர்த்துக் கொண்டான்..." ---- இரு மலர்கள்

தமிழை அமுதென்றும், இன்பத்தமிழ் உயிருக்கும் மேல் என்றும் பாடிய கவிஞ்ர்கள்..

"நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி
நடந்த இளம் தென்றலே வளர்
பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே" ---- பாசமலர்

என்று பாடல்களை அள்ளி கொடுத்து, தமிழைத் தாலாட்டி வளர்த்து இருக்கிறார்கள். இந்த பாடலாசிரியர்கள் காலத்தை வென்று இன்றும் நம் இதயத்துடிப்பில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்றும் இனிய நினைவுகளோடு,
கன்யா