Monday, October 23, 2006

தேரோட்டி!!

குந்தியின் கருவில் ஆதவன் வித்தாய்
துருவாசர் தந்த வரமென வந்தனன்
பெண்மையின் இழுக்கென பெட்டியில் புதைத்து
கங்கையின் மடியில் கறைதனைத் துடைத்தனள்

சுமந்தவள் விட்டதும் கொண்டவள் சுமக்க
பிறப்பில் வீரனாம் வள்ளல் வேந்தன்
புரவிதனைப் பூட்டி தர்மத்தின் ரதனென
வளர்ந்தான் அதிரதன் ராதையின் மகனென

இளையவன் மார்பில் கவசமும் குண்டலமும்
இளைமையின் வேகம் திமிரிடும் தோள்களும்
குறுதியில் சத்ரியன் குலமறிய கொழுந்திவன்
பிறவியில் வீரனாம் குணமதில் தூயனாம்

வீரமும் விளையாட்டும் சளைக்கா சிங்கம்
வில்லுக்கு விஜயனாம் அர்ச்சுனன் தனை எதிக்கொள்ள
கற்றோர் வீற்றிருப்பரோ ஹஸ்த்தினாபுர அவைதனில்
கல்லாதார் மதி போல் இவன் மனம் கலங்க கதைத்தனர்

குலமெது கூற்றெது அறியா இழுக்கிவன்
வீரத்தின் விழுப்புண் சுமக்கா சிறியவன் என
குணமகன் கூச சபையோர் பேசக் கண்டு
கறை தனை துடைக்க நட்பு கொண்டான் கௌரவரின் மூத்தவன்

நட்பை வளர்த்து நம்பிக்கை கொண்டான் துரியோததன்
முத்துக்களை எடுக்கவோ தொடுக்கவோ என்ற
சூதரியா மனம் கண்டு என் உயிரும் நீயென
உறக்கச் சொன்னான் கர்ணன் அன்று

சுபாங்கியின் காதலும் கௌரவன் நட்பும்
போதுமென வாழும் பொன் மனம் கொண்டவன்
போர் என்று முழங்க வீறு கொண்டு எழுந்தனன் - பாதம்
பிடறியில் பட புறமுதுகிட்டு எதிர்கொண்டோர் பறந்தனர்

மாதா பிதா குரு தெய்வம் என்று
வரமெனப் பாதியும் சாபமாய் மீதியிம்
சூதில் மட்டுமே இம்மாவீரனை வீழ்த்தி
வீரமென்று தோள் தட்டி கொண்டனர்

நிராயுதபாணியாய் தேர் ஏந்தும் மகன் கண்டு
இதுவே சமயம் எய்தடா அம்பை என்று
சாரதியாம் மாமன் கூற போர் முறை மறந்தான்
வில்லுக்கு விஜயனாம் மருமகன் அர்ச்சுனன்

சீறிவரும் ஆயுதத்தை திறம்கொண்ட மார்பில் ஏந்தி
மடி சாய்ந்த மகன் கண்டு ஓலமிட்டாள் பூமித்தாய்
மகனே என்று தோள் சாய்த்து இறுதியில் அவன் தலை காத்து
தாயான வந்த தர்மத்தை தானமாய் வாங்கினான் சூதுவன் கண்ணன்

வாதும் சூதும் வீழ்த்துமோ வீரனை
வஞ்சனை மட்டுமே வெல்லுமோ தர்மத்தை
வீரமும் கொடையும் தத்தெடுத்த தலைமகன் - புவியுள்ளவரை
வாழ்வாங்கு வாழி வீரனே நின் புகழ்