Monday, August 31, 2009

ஏன்????

கேளடி பராசக்தி

மேகங்களின் பாரம் குறைய
மழை துளி தந்தாய்
மழை துளிகள் விழுவதை தாங்க
அருவிகள் தந்தாய்

அருவிகளின் வேகம் தடைபட
நதிகள் தந்தாய்
நதிகளின் தேடல் கிடைக்க
கடல்தனை தந்தாய்

கடல்மகள் வெட்பம் தணிக்க
தழுவும் தென்றல் தந்தாய்
தென்றலின் ஈரம் எடுத்து
மேகம் தந்தாய்

நின் படைப்பில்
அனைத்துக்கும் இலக்கொன்று படைத்தாய்
அதை ஒரு வட்டத்துக்குள் வரைந்து வைத்தாய்

சொல்லடி பராசக்தி
மனிதனை மட்டும் ஏன் அலைய விட்டாய்

இன்னதென்று தெரியாது
ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு
அதை தேடித்திரிய
இருட்டில் ஒரு பாதை

தேடல் தீரும் முன்பே
தள்ளாடும் தேகம்
பயணம் முடியும் முன்பே
உயிர் விடுபடும் வேகம்

ஏன் இல்லை நிறைவு

மார்கங்களில் கிடைக்கும் என்று
மனமொத்து நாடினால்
மதம் என்ற மதம் பிடித்து
மானுடம் அழியக் கண்டேன்

ஏனடி பராசக்தி

போராடும் மனமும்
புரியாத குணமும்
முடியாத தேவைகளும்
மனிதருக்கு கொடுத்தாய்