Sunday, November 19, 2006

ஹைக்கூ - 2


விதவை

கனவுகளுக்கு வாசல் திறந்து
வண்ணங்களை உதிர்த்த
வெள்ளைப் புறா

பனித்துளி

இயற்கையவளின்
தேகம் உரசிப் போனதில்
தென்றலுக்கு வேர்த்தது

நட்பு

ஊரார் சொல்லும் காதலை
ஒதுக்கி வைத்திவிட்டு
என் கண்களை மட்டுமே
பார்த்துப் பேசும் உன் உறவு...

பக்தி

இறை நாடும் ஆத்திகரும்
தனைச்சாடும் நாத்திகரும்
உண்டென்றும் அல்லவென்றும்
அரனோடுகொள்ளும் உரிமைப் போராட்டம்

சுமை

என்னை மறந்த நீ
உன் நினைவுகளை மறக்கும் பயத்தில்
என் சட்டைப் பையில் உன் நிழற்படம்

Monday, November 06, 2006

ஹிக்கூ - 1


ஹைக்கூ எழுத என்னோட முதல் முயற்சி.... :D


ரகசியம்

உனக்குமட்டும் காதல் சொன்னேன்
ஊருக்கே அச்சடித்தாய்
திருமண அழைப்பிதழ்

பொய்

காமம் என்றேன்
கயவன் என்றாய்
காதல் என்றேன்
கவிஞன் என்றாய்

கூட்டம்

நிரத்துக்கு ஒன்றாய்
கட்சிக்கொடி பிடித்தால்
வேளைக்கு ஒன்றாய்
சோத்துப் பொட்டலம்

நகரம்

வருமையின் கோடுகள்
வரைந்தே வயிர் வளர்க்கும்
செல்லச் சீமான்களின்
செல்வக் கூடாரம்

பள்ளிக்கூடம்

உறவாடும் சிசுவில்லை
என்றாலும் உறுதியோடு
ஸ்பாஸ்டிக் சொஸையிட்டி
வாசலில் ஒரு தாய்

***********************************************************************************

Monday, October 23, 2006

தேரோட்டி!!

குந்தியின் கருவில் ஆதவன் வித்தாய்
துருவாசர் தந்த வரமென வந்தனன்
பெண்மையின் இழுக்கென பெட்டியில் புதைத்து
கங்கையின் மடியில் கறைதனைத் துடைத்தனள்

சுமந்தவள் விட்டதும் கொண்டவள் சுமக்க
பிறப்பில் வீரனாம் வள்ளல் வேந்தன்
புரவிதனைப் பூட்டி தர்மத்தின் ரதனென
வளர்ந்தான் அதிரதன் ராதையின் மகனென

இளையவன் மார்பில் கவசமும் குண்டலமும்
இளைமையின் வேகம் திமிரிடும் தோள்களும்
குறுதியில் சத்ரியன் குலமறிய கொழுந்திவன்
பிறவியில் வீரனாம் குணமதில் தூயனாம்

வீரமும் விளையாட்டும் சளைக்கா சிங்கம்
வில்லுக்கு விஜயனாம் அர்ச்சுனன் தனை எதிக்கொள்ள
கற்றோர் வீற்றிருப்பரோ ஹஸ்த்தினாபுர அவைதனில்
கல்லாதார் மதி போல் இவன் மனம் கலங்க கதைத்தனர்

குலமெது கூற்றெது அறியா இழுக்கிவன்
வீரத்தின் விழுப்புண் சுமக்கா சிறியவன் என
குணமகன் கூச சபையோர் பேசக் கண்டு
கறை தனை துடைக்க நட்பு கொண்டான் கௌரவரின் மூத்தவன்

நட்பை வளர்த்து நம்பிக்கை கொண்டான் துரியோததன்
முத்துக்களை எடுக்கவோ தொடுக்கவோ என்ற
சூதரியா மனம் கண்டு என் உயிரும் நீயென
உறக்கச் சொன்னான் கர்ணன் அன்று

சுபாங்கியின் காதலும் கௌரவன் நட்பும்
போதுமென வாழும் பொன் மனம் கொண்டவன்
போர் என்று முழங்க வீறு கொண்டு எழுந்தனன் - பாதம்
பிடறியில் பட புறமுதுகிட்டு எதிர்கொண்டோர் பறந்தனர்

மாதா பிதா குரு தெய்வம் என்று
வரமெனப் பாதியும் சாபமாய் மீதியிம்
சூதில் மட்டுமே இம்மாவீரனை வீழ்த்தி
வீரமென்று தோள் தட்டி கொண்டனர்

நிராயுதபாணியாய் தேர் ஏந்தும் மகன் கண்டு
இதுவே சமயம் எய்தடா அம்பை என்று
சாரதியாம் மாமன் கூற போர் முறை மறந்தான்
வில்லுக்கு விஜயனாம் மருமகன் அர்ச்சுனன்

சீறிவரும் ஆயுதத்தை திறம்கொண்ட மார்பில் ஏந்தி
மடி சாய்ந்த மகன் கண்டு ஓலமிட்டாள் பூமித்தாய்
மகனே என்று தோள் சாய்த்து இறுதியில் அவன் தலை காத்து
தாயான வந்த தர்மத்தை தானமாய் வாங்கினான் சூதுவன் கண்ணன்

வாதும் சூதும் வீழ்த்துமோ வீரனை
வஞ்சனை மட்டுமே வெல்லுமோ தர்மத்தை
வீரமும் கொடையும் தத்தெடுத்த தலைமகன் - புவியுள்ளவரை
வாழ்வாங்கு வாழி வீரனே நின் புகழ்

Thursday, September 28, 2006

என்னவென்று சொல்வதம்மா?

அவனைக் கண்ட முதல் நாள்
ஏனோ சலனப்பட்டது என் இதயம்
ஒரு முறை அவனைத்
திரும்பிப் பார்க்கச் சொன்னது என் கண்கள்

புன்னகைத்தான் வெட்கப்பட்டேன்
அருகில் வந்தான் நெருங்கத் துடித்தேன்
காதல் என்றான் மயங்கி நின்றேன்
கைபிடித்தான் கனவுகள் கொண்டேன்

காதலின் மொழி பேசி
அழகாய் என்னைக் காதலி என்றான்
ஏனென்று கேட்காமல்
என்னவனே நீ என்றேன்

உன்னோடு மட்டுமே என் உறவென்றான்
நீ இல்லையேல் நான் வெரும் உடலென்றான்
உடலென்றும் உயிரென்றும் இருதுருவம் ஏனென்றான்
ஒன்றாகி உறவாடி கலந்ததில் சுகமென்று மாயம்செய்தான்

அவன் நிழலைக்கூட
காதலித்த எனக்கு இன்று
நிஜத்தைத் தேடி அலைகையிலே
என் நிழலைத் தொலைத்த காயம்

நாட்கள் மாதங்களாய் ஓடியது
இதயம் வடித்த இரத்தம்
என் கருவறையில்
விதையாய் வளரக் கண்டேன்

காதலின் மயக்கத்தில்
பெண்மையை அள்ளிக் கொடுத்த எனக்கு
காலம் சுமையானது
வெருப்பென்னும் துவர்ப்பு சுவையானது

உயிரை இழந்துவிடலாம் என்று
உள்ளம் வாதிட்டது என்ன செய்வேன்
கொலை செய்வது போல்
கூனிக் குறுகியது என் மானுடம்

ஊரை மாற்றினேன்
என் பேரை மாற்றினேன்
மறைந்தான் கணவன் என்று
பொய்யாய் வேடம் தறித்தேன்

இத்தனை பொய்களும்
அத்தனை வேஷங்களும்
வீங்கிக் கொண்டிருந்த
என் வேதனையை மறைக்கவில்லை

மசக்கை மயக்கமில்லை
மாங்காய் சுவைக்கவில்லை
பசியென்று புசிக்கவில்லை
பாவம் பயிரென்று உரமிட்டேன்

வளரும் பிறை கண்டு வாடினேன்
தளரும் நடை கண்டு நாட்கள் எண்ணினேன்
ஏனோ கடனென்று இந்த
உயிரைச் சுமக்கலானேன்

அம்மா என்று என் முகம் காண
முட்டிக் கொண்டு வெளியே வந்தாள்
தொப்புள் கொடி அறுத்த மறுகணம்
அவளுக்கு குப்பைத்தொட்டியைத் தேடினேன்

கட்டிய சேலையில் பத்திரமாய் சுற்றி
பதமாய் ஒரு குப்பையில்
வைத்தேன் இந்த மரகதத்தை
இதயம் கணத்தது இருந்தும் திரும்பினேன்

முதலடி எடுத்து வைத்தேன்
வீதியின் ஓராமாய் பசியென்று ஒரு பிஞ்சு
கையேந்தி கதறியது
உள்ளம் கலங்கியது என்ன செய்வேன்

இரண்டடி எடுத்து வைத்தேன்
நாய்கள் ஊளையிட்டது
காதை இறுகப் பொத்திக்கொண்டு
நடக்க முயன்றேன் கால்கள் உறைந்தது

கயவனோ காமுகனோ
ஒருவனோடு மட்டுமே களப்பின்
அதுவே கற்பு என்று பறைசாற்றும்
கலாச்சரம் சொல்லுமா நான் கற்புல்லவள் என்று

தாய்மையை இறையென்பார்
அவள் முதுமையை சுமையென்பார்
பொற்றவளை காப்பகத்தில் கைவிடும்
சமூகம் சொல்லுமா நான் தாய்யில்லை என்று

ஒருவனுக்கு ஒருத்தி என்று
கதை சொல்லும் கலாச்சாரத்தில்
பாதுகாப்பாய் காமம் செய் என்று
விளம்பரப் பேடைகள் விற்கும் அவலம்

இந்த சமுதாயத்தைக் கண்டா
நான் கூசினேன்?
என்னக்குள் இருக்கும் தாய்மையைக் கொல்லும்
இந்த விதிமுறைகள் எனக்குத் தேவையா?

காதலைப் பொய்யாக்கி
காமத்தில் என்னை களவாடியவனுக்கும்
இல்லாத இந்த பயம்
எனக்கு மட்டும் ஏன் வரவேண்டும்?

போதும் இந்தப் பொய்கள்
இனி ஓட வேண்டியவள் நான் அல்ல
தொலைய வேண்டியவள் என் மகளல்ல
இதயம் இருப்பின் சிந்திக்கும் உலகம்
இல்லையேல் வேறொரு குப்பைத்தொட்டியில்
வேறொத்தி நிற்ப்பாள் என்னைப் போல!!!************************************************************************************

தமிழில் அனாதை என்ற வார்த்தை மிகவும் கொடுமையானது. அதிலும் பெற்ற தாயே தன் கருவை அனாதையாக்குவது சொல்லக் கூடிய அவலமல்ல..

இதற்கு என்ன காரணம்?? சமுதாயமா... அதன் சட்டங்களா.. இல்லை அவரவர் தேவைக்கேற்ப மாறும் கலாச்சாரமா?? இதுதான் கலாச்சாரம் கற்றுக் கொடுக்கும் கோட்ப்பாடுகளா?

சிந்திக்க மனமுடையோர் சிந்தியுங்கள்!!!

கன்யா

Saturday, September 23, 2006

சிரிவிளையாடல் - finale

இடம்: செம்பு மன்னன் தமிழ் சங்கம்
பார்டீஸ்: முருகன், செம்பு, கீரர்..

காட்சி: அப்பனுக்கு சொன்ன மாதிரி செம்புவுக்கும் கேள்விக்கு பதிலை காதில் ஓதுகிறார் முருகர்.. செம்பு அப்படியே சொக்கி போய் சந்தோஷத்துல பரிசுகளை அழைத்து வரச் சொல்றார்..

கீ: மன்னா.. நில்லுங்கள்.. முருகன் அப்படி என்ன சொன்னார் என்று அலசி ஆராயாமல் பரிசை எப்படித் தரலாம்?

மு: யோவ்.. உன் சவுண்டை எல்லாம் எங்கப்பன்கிட்ட வெச்சுக்கோ.. நான் பொற்தாமரை குளத்துல எல்லாம் தள்ள மாட்டேன்.. நேர சிவலோகம் தான்..

கீ: இந்த மிரட்டலுக்கெல்லாம் பயந்தவன் நான் இல்லை.. எனக்கும் சொன்னாத்தான் உண்டு..

செ: அய்யோ கிழ கீரரே.. இது எல்லாம் வயசுப் பசங்க மேட்டர்..

மு: தோடா சைக்கிள் கேப்புல உட்டா சங்கராபரனமே பாடுவீங்களே... நீர் வயசுப் பைய்யனா???

செ: (ஈ என்று இளிக்கிறார்....)

கீ: ஆவ்வ்வ்வ்வ்.. செம்புவுக்கு தெரிஞ்சா எனக்கும் தெரியனும்..

மு: கருமம்.. கேளும்..

“மதுரையின் மணம் மல்லிகையில்
மன்னவன் மனம் மங்கையரில்
காதலின் மணம் காமத்தில்
அந்த மோகத்தினால் மங்கையர் மயக்கத்தில்
அதனால், கொஞ்சும் உன் தமிழிலில்
உன் நேசத்துக்கு வந்தது இந்த மணம்”

இதுதான் மேட்டர்..

கீ: தப்பு...

மு: என்ன தப்பு??

கீ: அது தெரியாது.. ஆனா தப்பு..

மு: யோவ்வ்வ்வ்வ்

செ: தமிழ் வேந்தர்களே.. அமைதி அமைதி.. கலைஞர்களுக்கு மத்தியில் சர்ச்சை இருக்கலாம் ஆனால் சண்டை கூடாது..

மு & கீ: அடங்குடா செம்பு

செ: சரி சரி.. பரிசைக் கொடுக்கலாமா?

கீ: என்ன தப்புன்னு சொல்ல தெரியல.. சோ.. கொடுத்துடுங்க

செ: யார் அங்க.. அழைத்துவாருங்கள், பரிசுப் பொக்கிஷங்களை!!!!

பெரிய பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஒள: என்ன ஆச்சு முருகா

மு: ஏன் கேக்குற பாட்டி.. நான் கூட அழகா அம்சமா 5 பிகர் வரும்ன்னு பாத்தேன்

ஒள: பின்னே.. எல்லாம் கிளவிங்களா??

மு: கிளவிங்களா இருந்து இருந்தா கூட சரி பிரியா விட்டு இருப்பேன்.. அவுங்க எங்கயாவது போய் பொளச்சுக்குவாங்க..

ஒள: அப்பறம்...???

மு: எல்லாம் 5 வயசு புள்ளைங்க... எல்லாம் என்னைப் பார்த்ததும்.. அங்கிள் அங்கிள்’ன்னு மிங்கிள் ஆகிடுச்சுங்க.. :( ... இனி அதுங்களை பாத்துக்குற வேலை வேற..

ஒள: ஓஹோ... இதுக்குத்தான் இங்க சோகமா??

மு: அட நீ வேற பாட்டி.. இதைக்கூட சமாளிக்கலாம்.. இல்லை எங்க அப்பன் பண்ணின மாதிரி கார்த்திகை பெண்களை அப்பாயிண்ட் பண்ணி இதுங்கள வளக்க சொல்லலாம்...

ஒள: பின்னே, ஏன் இந்த சோகம்...

மு: சரக்கடிச்சவன் அதுக்கு ஊருகா நக்கலாம்.. ஆனா பாட்டி, அல்ப்ப மேட்டர், செம்பு சதி பண்ணீட்டதுல என் வீட்டில எத்தனை வருஷம இந்த வேளை பண்றே, 5 புள்ளைகளும் எந்த ஆங்கில்’ல பார்த்தாலும் உன்னோட ஜாடையா இருக்கேன்னு சொல்லி சாத்து சாத்துன்னு சாதுறாளுங்க!!! சும்மா நேரத்துல சக்களத்தி சண்டையில் நமக்கு நல்ல கவனிப்பு இருக்கும்.. ஆனா இப்போ அவளுங்க ரெண்டு பேரும் ஜோடி சேந்துகிட்டாங்க.. இந்த கொடுமைய எங்க போய் சொல்லுவேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒள: நல்ல குடும்பம் இதுக்கு நான் ஒரு ஆஸ்த்தான புலமைப் பாடகி.. ஏதோ படத்தை முடிக்கனுமே... சோ பாடித்தொலைக்கிறேன்

மு: நிறுத்துங்க நிறுத்துங்க... இந்த சிச்சுவேஸனுக்கு... நானே பாடிக்கிறேன்... எத்தனை பாட்டு கேட்டு இருப்பேன்

"ஊரத் தெரிஞ்சுகிட்டே உலகம் புரிஞ்சுகிட்டேன்
ஒளவையே ஓ ஒளவையே
வேலும் ஒடஞ்சுடிச்சு மயிலும் பறந்துருச்சு
ஒளவையே ஓ ஒளவையே

பொண்டாட்டி கோவப்பட்டா சின்னூடு புடிச்சேன்
பொம்பலைங்க சேந்துகிட்டு என் தலைய உருட்டுறாங்க

ஊரத் தெரிஞ்சுகிட்டே உலகம் புரிஞ்சுகிட்டேன்
ஒளவையே ஓ ஒளவையே
வேலும் ஒடஞ்சுடிச்சு மயிலும் பறந்துருச்சு
ஒளவையே ஓ ஒளவையே

ஏன் கதை ஒரு சோகம்தான்
அதை யாரும் வந்து கேட்ட
பாடினேன் நான் பாடினேன்
ஒரு பாடில் நீ கேட்க

நான் புடிச்சேன் ஜோடி ரெண்டு
எனக்கேது ஜோடி இங்கு
நான் வந்து நிக்கிறேனே
ரோடுல நடு ரோட்டுல

நான் போட்ட கணக்கு அஞ்சு
செம்பு போட்டானே வேற ஒன்னு
ஆடிட்டான் ஒரு ஆட்டத்த

ஊரத் தெரிஞ்சுகிட்டே உலகம் புரிஞ்சுகிட்டேன்
ஒளவையே ஓ ஒளவையே
வேலும் ஒடஞ்சுடிச்சு மயிலும் பறந்துருச்சு
ஒளவையே ஓ ஒளவையே"

பா: முருகா... என்ன இது... இப்படி பாட ஆரம்பிச்சுட்டே??

சொ: ஹிஹிஹி... எனக்கு முந்திகிட்டு ஐந்ஞ்சையும் தள்ளிக்கலாம்ன்னு நினைச்ச இல்ல அதான்....

பி: ஏண்டா தம்பி... வள்ளி மேட்டர்'ல எல்பு கேட்ட மாதிரி இப்போவும் கேட்டு இருக்கலாம் இல்ல

மு: அடச்சே... வெந்த புண்ணுல என்னோட வேல்'லையே பாச்சுறீங்களா?

வ & தெ: முருகா... செய்யிறதெல்லாம் செய்துட்டு நாங்க உங்க தலைய உருட்டுறோம்ன்னு பாட்டு பாடுறீகளோ..... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம இங்க வந்து குடும்பத்தோட ஆலோசனையா? அப்பா, அண்ணன், அம்மாகிட்ட எல்லாம் கண்சல்டிங்கா...???

ஒள: ஆஹா.... ஆரம்பிச்சுட்டாங்யா.... இது இவங்க குடும்பப் பிரச்சனை... இனி நாம அப்ஸ்காண்டு.................................................

**** இதுவரை சிவன் பேமலி டோட்டல் டேமேஜ்.... இனி அவங்களே டாமேஜ் கண்டிரோல் பண்ணிக்கட்டும்!!!!!!!

நிறைய இஸ்பெல்லில் மிஸ்டேக்கோட டைப் அடிச்சதையும் பொருட்படுத்தாம.... இந்த மெகா சீரியல படிச்சதுக்கு நெம்ப தாங்ஸ்சுங்கோவ்!!!!!1

சிரிவிளையாடல் - part III

Recap – எப்பவும் போல நம்ம செம்பு மன்னன் சந்தேகத்தைக் கிளப்ப, ஜொள்ளு தாங்காம நம்ம தருமி சொக்கனுக்கு SOS அனுப்ப, சொக்கனும் அவசர அவசரமா FAQ டாக்குமெண்ட்ட பிரௌஸ் பண்ண போய் இருக்கார்… இதை எல்லாம் பெவிலியன்’ல இருந்து, Mrs. மீனாட்சி சொக்கநாதனும் அவங்களோட கடைக்குட்டி முருகனும் நோட் பண்ணிகிட்டு இருக்காங்க

இடம்: சரக்குக் காய்ச்சும் கிடங்கின் ஓப்பன் பாடியோ
பார்ட்டீஸ்: பெப்ஸி, லேஸ் சிப்ஸ், ரிக்லைனரோட முருகனும், அம்மா பார்வதியும்.

காட்சி: இதுவரை நடந்த அனைத்தும் பார்த்து லேசா முருகனுக்கு டென்ஷன் ஆகுது.. ஆனா காமெடி மெகா சீரியல் பாக்குற குஷில அம்மா இதை நேட் பண்ணவே இல்லை..

மு: அம்மா என்ன இது சின்ன புள்ளத்தனமா இருக்கு..

பா: எதைடா சொல்ற?

மு: செம்புதான் அசட்டுத்தனமா கேள்வி கேக்குறான்னா… அப்பாவும் இப்படி.. சீ சீ..

பா: அப்படி சொல்லுடா என் தங்கமே.. உனக்காவது புத்தி இருக்கே..

மு: பின்னே என்னம்மா.. போட்டின்னு வந்த அப்பறம் அதுல கொசுறா தருமிக்கு எதுக்கு ஒரு பிகரு?? போட்டிய முடிச்சோமா கிடைச்சத மொத்தமா ஒரு அள்ளுனோமான்னு இல்லாம.. சே சே.. முக்கி முக்கி ரகசியமா சொல்லிக் கொடுத்த பாடம் எல்லாம் அந்த பக்கம் காதுல வெளிய விட்டுடாரு போல!!!

பா: அடபாவிமக்கா.. இதுக்குத்தான் இத்தனை பீலிங்கா!!! அது சரி இதைத்தான் நீ உங்கப்பனுக்கு காதுல சொன்னியா.. அப்போ நீ நிஜமாவே சின்ன பையன் தானேடா..

மு: மூர்த்தி சிறுசானாலும் நம்ம கீர்த்தி பெரிசும்மா.. இதை எல்லாம் கண்டுக்காதே..

பா: அப்பனோட போடுறது எல்லாம் சண்டை.. ஆனா ஆளப்பாருங்கடா அப்படியே ஜெராக்ஸ்...

மு: சரி சரி.. இதை எப்படி டீல் பண்றதுன்னு என்னக்கு தெரியும்.. மீ கோயிங்.. யூ வாச்சிங்..

டிரிரிரிரிங்ங்ங்....(வெறும் சவுண்டு.. எல்லாம் ஒரு பீலிங்குக்காகத்தான்)

இடம்: செம்பு மன்னன் தமிழ் சங்கம்
பார்டீஸ்: முருகன், செம்பு, கீரர்.. இன்னும் சில ஜால்ராஸ்...

மு: யோவ் செம்பு என்னைய்யா உனக்கு பிரச்சனை.. ஏன் இப்படி எல்லாம் கேள்வி கேட்டு கொல்ற?

செ: சாரி.. நீங்க யாருன்னு தெரியலையே..

மு: டேய் டப்ஸா கண்ணா.. நல்லா பாரு.. உன்னோட அரசவைக் கேலண்டர்க்கு போஸ் கொடுத்துகிட்டு இருக்குறது யாரு??

செ: ஆகா… என் அப்பன் சொக்கனோட நெற்றிக் கண்ணில் இருந்து வந்த, ஆறுபடை வீடு கொண்ட என் அழகு முருகனா இது!!

மு: டேய் டேய்.. இந்த பில்டப்புத்தானே வேண்டாங்குறது.. எத்தனை காலம்டா இப்படி மொழ நீலத்துக்கு இண்ட்ரோடெக்ஷன் கொடுப்பீங்க.. ஏன் எங்களுக்குன்னு தனி அறிமுகம் கிடையாதா?

செ: சரி சரி கோவிச்சுக்காதே முருகா.. எப்படி இருக்கீங்க.. வீட்டுல எல்லா எப்படி இருக்காங்க… ஆமா ரெண்டு பேர எப்படி சமாளிக்கிறீங்க??

மு: அடப்பாவி.. அதுக்குள்ள இன்னோரு டவுட்டா??

செ: சாரி.. என்ன விஷயமா இந்த விஜயம்..??

மு: சொல்றேன்.. சொல்லத்தானே வந்து இருக்கேன்..

இடம்: மேல அப்படியே கட் பண்ணி, முருகன் வீட்டு குசனி அறை.. அதாங்க கிட்சன்.. அங்க போறோம்.. அப்பறம் அங்க இருந்து அப்படியே நகர்ந்து ஹால் வரைக்கும் வருவோம்
பார்டீஸ்: தெய்வானை, வள்ளி.. கொஞ்ச நேரம் களிச்சு நாரதர்..

வ: அக்கா.. கொஞ்ச நாளா எனக்கு என்னவோ கெட்ட கெட்ட கனவாவே வருது!!

தெ: அப்படியா.. இப்போ எல்லாம் எனக்கும் அப்படித்தான்.. என்னவோ திடீர் திடீர்ன்னு தூக்கம் கலையுது.. வயத்துல புளிய கரைக்கிற மாதிரி இருக்கு..

வ: அய்யோ அக்கா.. எனக்கும் அப்படித்தான்.. என்னவா இருக்கு??

தெ: எனக்கு என்னவோ திக்கு திக்குன்னு இருக்கு.. இவர் உன்னை ரூட் விட இங்க இருந்து அப்ஸ்காண்ட் ஆனதும் இப்படித்தான் இருந்துச்சு.. கண்மூடி திறக்குறதுக்குள்ள உன்னை தள்ளிகிட்டு வந்துட்டார்..

வ: சே சே.. அப்படி எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டாருக்கா..

தெ: எனக்கேவா.. ஆமா உன்னை டாவடிச்சப்போ நான் இருக்குறதை உன்கிட்ட சொன்னாரா?

வ: சொல்லல.... ஏன்கா அப்படி எதுவும் பண்ணுவாரோ?

தெ: பண்ணட்டும் அப்பறம் இருக்கு...

ஹால்’ல ஏதோ சத்தம் கேட்க.. ரெண்டு பேரும் அங்க நகர..

நா: நாராயனா.. நாராயனா..

வ & தெ: வாங்க நாரதர் மாமா... என்ன இன்னைக்கு குழப்ப குட்டை கிடைக்கலையா.. இங்க வந்து இருக்கீங்க..

நா: அய்யோ நாராயனா.. நான் அதுக்கு எல்லாம் இங்க வரலை தாய்களா.. அப்பா கிட்ட கோவிச்சுகிட்டு கிளம்பின முருகன் ஏதோ தன்னை ரிலாக்ஸ் பண்ணிக்க ஏதோ செய்றதா கேள்விப் பட்டேன்.. அது என்னன்னு கேட்டுட்டுப் போக வந்தேன் அவ்ளோதான்..

தெ: என்னது.. அப்பா கூட சண்டை போட்டு அதுனால டென்ஷனா?? சான்ஸே இல்லை.. என்ன நடக்குது.. உண்மைய சொல்லுங்க!!!

நா: நாராயனா.. இல்லை இல்லை.. நான் தப்பான நேரத்துல வந்துட்டேன்.. அப்பறம் கொஞ்ச நேரம் களிச்சு வரேன்..

வ: ஹலோ.. அதான் அக்கா கேக்குறாங்க இல்ல.. அப்பறம் ஏன் மழுப்புறீங்க.. என்ன விஷயம் சொல்லுங்க!!!

நா: அப்பா முருகா.. மன்னிச்சுக்கோ.. ரெண்டு பொம்மளைங்க மடக்கிட்டாங்க.. நானோ பயந்த சுபாவம்.. சோ உண்மை சொல்ல வேண்டியதா இருக்கு!!!

வ & தெ: போதும் போதும்.. மாட்டருக்கு வாங்க

நா: அது வந்து... ************

வ & தெ: என்ன?? ஏற்கனவே ரெண்டு.. இப்போ இன்னும் அஞ்சா??????? வரட்டும் வரட்டும் இன்னைக்கு ஒன்னுல ரெண்டு.. இல்ல இல்ல ஏழுல ரெண்டு பாக்குறோம்.. இதை அத்தையும் தடுக்கலையா.. அவங்களுக்கும் இருக்கு!!!!

இதற்கிடையில் சில காட்சிகள் ஓடுகிறது.. அவை பிளாஸ் போக்காக அப்பறம் வரும்.....

இடம்: ஏதோ ஒரு மலை.. இல்லை இல்லை நம்ம நடிகர் விஜெய் எங்க கல்லு கிடைச்சாலும் ஏறி குதிச்சுட்டு அதை டான்ஸ்’னு சொல்லுவாறே அது மாதிரி நம்ம முருகனும் ஒரு பாறை போல ஏறி நிக்கிறார்..
பார்டீஸ்: முருகன், ஒளவ்வையார் (ஒ ள வ்வையார்ன்னு படிக்கிற புத்திசாலிகளுக்காக.. அது அவ்வையார்)

ஒள: என்ன முருகா.. இப்படி இங்க வந்து மொட்டை வெய்யில்’ல நிக்குறீங்க.. சன் பாத்தா?

மு: தோடா.. கடுப்ப கிளப்பாம சைலெண்டா கிளம்புற வழிய பாருங்க பாட்டி.. ஞானப்பழம் பாட்டு எல்லாம் இனி செல்லாது!!!

ஒள: காலம் மாறும் போது அதுக்கேத்த மாதிரி நானும் பாட்டை மாத்திக்குறேன்.. இல்லைன்னா நல்லது சொன்ன எவன் கேக்குறான்.. அதையே மசலா போட்டு, தேவா மியூசிக் போட்டா கேக்குறானுங்க..

மு: என்னது தேவா மியூசிக்கா......

ஒள: அட ஏன் டென்ஸன் ஆகுறீங்க.. அதுவே ஈ அடிச்சாங் காப்பிதான்.. அதை நான் சுட்டா ஒன்னும் தப்பு இல்ல..

மு: அது சரி

ஒள: ஆமா கேட்டதுக்கு ஒன்னும் சொல்லலையே.. இங்க மொட்டை வெய்யிலுல என்ன பண்றீங்க

மு: ஒரே சோகம் அதான்.. கொஞ்ச நேரம் தனியா இருக்கலாம்ன்னு இங்க வந்துட்டேன்

ஒள: ஆகா.. உங்களுக்கே சோகமா?? என்ன ஆச்சு..

மு: அதை ஏன் கேக்குற பாட்டி.. விடு.. இதை எல்லாம் சொன்னா உனக்கு புரியாது!!!

ஒள: ஒரு காலத்துல நக்கலா நீங்க சுட்ட பழம் சுடாத பழம்’ன்னு சொன்னதே எனக்கு விளங்குச்சு.. இன்னும் வேற என்ன புரியாம போறதுக்கு.. மேட்டரை சொல்லுங்க

மு: அது வந்து பாட்டி.. பொண்டாட்டிங்க....

ஒள: ஓ.. குடும்ப ஊடலா..???

மு: அடச்சே.. ஊடலா இருந்தா நாங்க டபாய்க்க மாட்டோமா.. இல்லாமையா ரெண்ட கட்டினோம்.. இது வேற

ஒள: அப்படியா.. சரி மேல சொல்லுங்க..

மு: மொதல்ல இருந்து வரேன்.. செம்பு மன்னனுக்கும் ஒரு டவுட்டு.. கிளியர் பண்ணினா 5 பிகர்ன்னு அறிவிப்பு விட்டான்.. சரி அதை நாம தட்டலாமேன்னு நானும் அங்க போய் டவுட்ட கிளியர் பண்ணினேன்.. ஆனா பரிசை எனக்கு கொடுக்குறதுக்குள்ள....

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. பிளாஸ் பேக்.....

அடுத்த போஸ்ட்'ல

Wednesday, September 20, 2006

இன்று என் இதயம் வருடிய பாடல்: வாலியின் வரிகள்

காலையில் விழிக்க மனமில்லை, அலுவலகம் அலுத்தது இருந்தும் வந்தேன், வேலை சுமையானது, செய்ய மனமில்லை, செய்யவும் இல்லை. வேற என்ன பாடல்களை காதோரம் அலறவிட்டேன்...

கனிப்பொறியில் பாதி இடம் பாடலுக்காக ஒதுக்கினேன் ஆனால் அத்தனையிம் முழுதாய் இதுவரை கேட்டது இல்லை... எத்தனை பாடல்கள் ஓடியது என்று தெரியாது.. சட்டென்று ஒரு பாடல் மனதை ஏதோ செய்தது.. அதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...

***********************************************************************************
படம்: அன்பே சங்கீதா
பாடியவர்: S. P. B & S. P. Sailaja
இசை: இளையராஜா
வரிகள்: வாலி


சின்னப் புறா ஒன்று
எண்ணக் கனாவினில
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

ஒருவன் இதயம் உறுகும் நிலையை
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ கான்க
கீதாஞ்சலி செய்யும் கோவில்மணி
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணியோசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மா

சின்னப் புறா ஒன்று
எண்ணக் கனாவினில


மீட்டும் விரல்கள் காட்டும் சவரங்கள்
மறந்தா இருக்கும் பொன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன் மறுநாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆனை
நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா
சொல்லம்மா

சின்னப் புறா ஒன்று
எண்ணக் கனாவினில
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே


************************************************************************************

கண்ணதாசன் அவர்களுக்குப் பின் நான் ரசித்த வரிகள் வாலி அய்யாவுடையது.. ஒரு காலத்தில் இந்த வரிகள் வாலியுடையதா இல்லை கண்ணதாசனுடையதா என்று குழம்பும் அளவுக்கும் இருவரின் வரிகளும் ஆழமாகவும் அழகாகவும் இருந்தது... தமிழே இவர்களிடம் மயங்கும், நான் என்ன சிறு எறும்பு!!!

இந்த பாடல் spb, ராஜா & வாலி இவர்களில் கூட்டில் வந்த எத்தனையோ அருமையான பாடல்களில் ஒன்று. காதலிக்காதவருக்குகூட இந்த பாடல் சொல்ல முடியாத ஒரு சோகத்தை விட்டுச் செல்லும்.

இந்த பாடலை கேட்க விரும்புவோர்... இங்கே கேட்கலாம்

வாழ்க இசை, வளர்க தமிழ்.
கன்யா

Sunday, September 17, 2006

நிறைவு

மக்களே...

கொஞ்சம் பிசி.. அதுனால சிரிவிளையாடல் - finale இன்னும் under production'லயே இருக்கு...

இன்னைக்கு சிகாகோ வந்தேன்.. வந்த விமானத்துல அழகான ஒரு குடும்பத்தைப் பார்த்தேன்... பார்த்தப்போ தோனிய ஒரு கவிதைய என்னோட நோட்டுல நோட் பண்ணினேன்.. அதை இங்கே போஸ்ட் பண்றேன்...

************************************************************************************
வளையல் அழகென்று
கைநிறைய குலுங்கவிட்டேன்
தழுவி அனைக்கையிலே உன் மேனி கீரும் என்று
அத்தனையும் களைந்துவிட்டேன்

கொலுசொலி சுகமென்று
மன்னன் மயங்க ஒலிக்கவிட்டேன்
அதிர்ந்து நடைக்கையிலே உன் துயில் கலையுமென்று
சலங்கைகளை பிரித்துவைத்தேன்

மங்களமாய் அவர் தந்த
மாங்கல்யம் தொங்கவிட்டேன்
என் மார்பில் பசியாரும் பைங்கிளியே நீ பற்ற
உன் உள்ளங்கை சிவந்ததடி பொன்மகளே என்ன செய்வேன்

மன்னவனும் என் கலக்கம் கண்டு
மரகதமே உன் சிவந்த விரல் கண்டு
என் சித்திரம் இது கலங்குமெனில்
களட்டிவிடு அது பெரிதல்ல என்றார்

என்னவென்று சொல்வதம்மா
நான் கொண்ட இந்த வரம்
எத்துனை தவம் புரிந்தேனோ
இத்துனை சுகமாய் ஒரு இல்லரம்

என்னை நிறைத்த நீ
நம்மை சுமக்கும் அவர்
போதுமடி இந்த ஜென்மம்
நிறைந்துவிட்டேன் இனி ஏது சலனம்

*************************************************************************************

கண்ணு வெச்சுட்டேனோன்னு ஒரு டவுட்டு... சொ .. ஊர் கண்ணு உறவுக் கண்ணு... கொள்ளிக் கண்ணு.. குறிப்பா என் கண்ணு.. எல்லாக் கண்ணும் நாசமாப் போகட்டும்!!!! தூ தூ தூ... :D

அப்பா இப்போத்தான் ஒரு திருப்த்தி....;;)

Thursday, August 31, 2006

சிரிவிளையாடல் - 2

இடம்: பாண்டியன் அந்தப்புரம்
பார்ட்டீஸ்: இது குசும்புதானே... வேற யாரு இருப்பா Mr. & Mrs. செம்புப்பாண்டியன் தான்

Mr.: "மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு"

Mrs.: அய்யோ.. என் மட மன்னா.. நமக்கு கல்யாணம் ஆகி ரொம்ப காலம் ஆகுது... பாட்டையும் பாடுற ஆளையும் பாருங்கப்பா!!!

Mr.: ஓ... சாரி.. பாட்டு சரிதான்... ஆனா லொகேசன்.. பிகர் இதுதான் மாறி போச்சு...

Mrs.: என்னது?????????!!!!!!!!!!!!

Mr.: இல்ல இல்ல.. நான் மடையன்னு சொன்னேன்!!!

Mrs.: ம்ம்.. அது!!

Mr.: 'சரிம்மா.. எனக்குதான் பாட வராது... நீயாவது ஒரு ரொமாடிக் பாட்டு ஒன்னு பாடேன்... அதுல நானும் இருக்கனும்... நம்ம நாடும் இருக்கனும்..

Mrs.: ம்ம்.. சரி "மதுரை மரிக் கொழுந்து வாசம்
என் ராசாவே உன்னுடைய நேசம்..."

Mr.: இரு இரு... இது யாரோட லிரிக்ஸ்?? TR எழுதினதா??

Mrs.: சே சே.. இல்லீங்க... நம்ம வைரமுத்து ..

Mr.: ஏதேது.. நம்மவா... ??

Mrs.: அடச்சே.. நீங்களும் உங்க புத்தியும்..

Mr.: இல்லம்மா.. சும்மா ஒரு அடுக்குமொழியா வருதுங்குறதுக்காக என் நேசத்துக்கு எப்படி மரிக்கொழுந்து வாசம் வரும்??

Mrs.: ஓஹோ... சந்தேகமா... சரிதான் இன்னைக்கு நான் பாட்டை முடிச்ச மாதிரிதான்... நாம கசாஃஸ் பண்ணின மாதிரித்தான்!!!

Mr.: நோ நோ... இந்த மாதிரி மேட்டர்'ல எல்லாம் சந்தேகமே வரக்கூடாது... வந்தா கேக்குறது மா.புதம் கூட இப்போ இல்ல!! சோ... நம்ம புலமை வேந்தர்களைக் கேக்க வேண்டியதுதான்...

Mrs.: மண்ணாங்கட்டி... உங்க தமிழ் மன்றதுல இருக்குறது எல்லம் பல்லு போன வெந்தாடிக் கேசுங்க... இதுல சிலது சிங்கிள் மேன் ஷோ வேற... இந்த சந்தேகதுக்கு அவங்க பதில் சொல்லீட்டாலும்...!!

Mr.: ஓஹோ.. அது வேற இருக்கா... சரி எப்பவும் போல பொற்கிளிதான்...

Mrs.: இதுக்கு மேல உங்க சந்தேகம் தீற நீங்க பொற்கிளி கொடுத்துகிட்டு இருந்தா அப்பறம் கஜானா காலியாகும்... ஜனங்க உதைப்பாங்க!!!

Mr.: என்ன என்ன... கஜாலாவா... !!

Mrs.: அடச்சே... கஜானா.... (செவிட்டு டாஷ்!!!)

Mr.: ம்ம்.. கேட்குது!!! அப்போ என்ன பண்ணலாம்... ஐடியா!! யார் அங்கே...

************************************************************************************

இடம்: அவர் அவர் வீடு (லொகல் அனௌஸ்மெண்டு மீடியா - வாக்கி டாக்கி மாதிரி ஆனா எல்லாருக்கும் இருக்கு!! )

பார்ட்டீஸ்: நம்ம அறிவிப்பாளர் (பிகர்தான்!!), கேட்டுகிட்டு இருக்குற பொது மக்கள்... எப்பவும் போல தருமி!!!

அ: வணக்க்க்க்க்கம்... பாண்டியன் சந்தேகம்... அறிவிப்பது க்க்கமலா (இந்த டையலாக்கை எப்படி படிக்கனுமோ அப்படி படீங்கப்பா!!! சன் டிவி செய்தி வாசிப்பாளர் .. நியாபகம் வருதா!!)

எல்லாரும் கவனிக்கிறாங்க

அ: எப்பவும் போல இப்பவும்... எல்லா விஷயத்தைப் போல இந்த விஷ்யத்திலும்... எல்லருக்கும் தெரிஞ்ச, நம்ம பாண்டிய மன்னருக்கு மட்டும் தெரியாமப் போன...

த: அம்மா தாயே... மேட்டருக்கு வாருவியா... இல்ல இது இந்த வாரம்... மேட்டர் அடுத்த வாரம்ன்னு மெகா சீரியல் மாதிரி சொல்லிட்டு போவியா?

அ: (ஒரு சிறு சினுங்கள் சிரிப்பு) சாரி... மன்னருக்கு சந்தேகம்... தீர்த்து வைப்பவர்களுக்கு ஐந்து பிகர்கள் பரிசு!!! (புதுசு கண்ணா புதுசு.. சவுண்டு டிராக்)

த: ஆஹா.. ஆத்தா கமலா.. பரிசு என்ன... ஒரு தடவ ரிபீட்டு...

அ: ம்ம்.. நீங்க கேட்டது சரிதான்... ஐந்து பிகர்கள்!!!

த: ஆ ஆ... சொக்கா...

அ: யோவ் நில்லு... கேள்வியே என்னன்னு இன்னும் சொல்ல விடல... அதுக்குள்ள சொக்காவாமா.. உன் சொக்கர் என்ன திருட்டு கொஸ்டீன் பேப்பர் பிரிண்ட்டு போடுறாரா?? நம்ம அரசருக்கே எப்போ எந்த சந்தேகம் வரும்ன்னு தெரியாது!!

த: சாரி... சொல்லும்மா...

அ: ம்ம்.. ஆதாகப்பட்டது... ஒரு தலைவன்.. தன் தலைவி மீதோ.. இல்ல ஸ்டெப்பினி மீதோ அதிகமான அன்பு (நேசம்) வைக்கும் போது.. அதுக்கு மதுரை மரிக்கொழுந்தோட வாசனையை உவமையா சொன்ன அது சரியா!!

த: சே.. இது என்ன ஜுஜுபி மேட்டர்.. இதுக்கு சொக்கன் வேண்டாம் நானே எழுதுவேன்... இருந்தாலும் அவர் எழுதினா ஒரு கெத்தா இருக்கும்...

அ: என்னவோ பண்ணித்தொல....

************************************************************************************

இடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாடம்
பார்ட்டீஸ்: தருமி... சொக்கன்

த: சொக்கா.. சொக்கா.. எங்கே போன... நாயாக் கத்துறேன் உனக்கு கேக்குதா இல்லையா!!! அய்யா... வா ராசா வா... அம்மா மீனாட்சி... கொஞ்சம் சின்ன பிரேக் விட்டு அவர இங்க கொஞ்சம் அனுப்பி வையேன்...

அசரீரியா நம்ம பார்வதியம்மா: டேய் தருமி.. உனக்கும் உன் மன்னனுக்கும் தான் வேலை இல்ல... எனக்குமா... நான் என்ன சொக்கன முந்தானையிலயா முடிஞ்சு வெச்சு இருக்கேன்... கலட்டி விட... தேவையில்லாம என்னை இழுக்காதே... நான் பிசியா சீன் பார்த்துகிட்டு இருக்கேன்...

த: சாரிம்மா... மெகா சீரியலா... எங்க வீட்டுக்காரியும் இப்படிததான்... சமையல் கூட பண்றதே இல்லை... என்னைப் பார்த்தாவே தெரியுமே.. எஃசரே இல்லாம எலும்பு தெரியுதே.... யூ கண்டினியூ.....

த: சொக்கா... சீக்கிரம் வா!!

சி: யோவ் தருமி... உனக்கு ஒரு நேரம் காலமே இல்லையா... இப்போதான் முருகன் புண்ணியத்துல என்னோட மொத பத்தினி பிசியா சமாதானம் பண்ண போய் இருக்கா... இதுதான் சான்ஸ்சுன்னு இப்போத்தான் கங்கையில நீராடிகிட்டு இருக்கேன் (கண்ணடிக்கிறார்)... இப்போ எதுக்கு இந்த கூவல்?

த: என்ன சொக்கா.. உனக்கு இருக்குற தெரமை என்ன... அறிவு என்ன... ஆப்டரால் ஒரு சிங்கிடியா... இன்னும் ரெண்டு இருந்தா எப்படி இருக்கும்...

சி: ரெண்டா?? அப்போ மீதி மூணு...

த: அட உனக்கும் தெரியுமா.. நான் தெரியாதோன்னு என்னக்கு ஒரு ரூட் போட்டேன்!!

சி: மூச்சுவாங்க கேள்வி கேட்ட அப்பறமும் என்னை பத்தி உனக்கு புரியல இல்ல... சரி விடு... மேட்டருக்கு வா...

த: சரி சரி... உனக்கு மூணு எனக்கு ரெண்டு...

சி: டேய்.. இது ரொம்ப ஜாஸ்தி.. உன் சைஸ்ச பாரு... இதுல நீ செட்டப்பா வேற இருக்கப் பிளான் போடுறியா... நாலு எனக்கு.. வேணும்ன்னா நீ ஒரு பிகர தள்ளிகிட்டு போ

த: சொக்கா.. இது கொஞ்சம் டூமச்சா தெரியல... ஏற்கனவே ரெண்டு.. இப்போ நாலா??

சி: நம்ம யாரு... அதான் இவ்ளோ முடி இருக்கு இல்ல... லொகேசனுக்கு ஒன்னா ஒலிச்சு வெச்சுக்க மாட்டேன்!!!

த: சரி சரி... இப்போ என்ன பண்ணலாம் அதை சொல்லுங்க!!!

சி: ஹ்ம்... தண்ணில தண்ணியடிச்சுகிட்டு இருந்தவன கூப்பிட நானும் கட்டின டர்க்கி டவலோட வந்துட்டேன்... என்னோட PDA'ல தான் சொம்போட.. சே செம்போட எல்லா சந்தேகத்துக்கும் FAQ போட்டு வெச்சு இருக்கேன்... இரு வரேன்!!

************************************************************************************

அடுத்த போஸ்ட்... ஒரு சிரிவிளையாடல் டுவிஸ்டுடன் வரும்!!!!!..................:D

Thursday, August 24, 2006

சிரிவிளையாடல் - 1

இடம்: சிவலோகம்
பார்ட்டிங்க: நாரதர்... சிவபெருமான்.. பிள்ளையார்... முருகன்... பார்வதியம்மா
சீன்: இப்பவே சீன் போட்ட அப்பறம் என்னதுக்கு மேல படிக்கிறது... சோ.. படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க....


************************************************************************************

நாரதர் (நா): "ஞானப் பழத்தைப் பிழிந்து...."

ஆடியன்ஸ்: "அய்யா நாரதரே.... நிறுத்தும்மையா உம் சகுநி வேலையை... இதை நாங்க நடிகர் திலகம் சிவாஜி அய்யாவோட திருவிளையாடல்-1'லயே பார்த்தாச்சு... புதுசா ஏதாவது சொல்லுங்க..."

நா: "அப்படியா அப்போ இது புதுசு கண்ணா புதுசு.... சிங்காரி சரக்கு நல்ல சரக்கு.. சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு..."

சிவபெருமான் (சி): "என்ன நாரதா, புதுசா இம்போர்டட் சரக்கா... ? இந்த ஆட்டம் ஆடுறே"

நா: "அட நீங்க வேற... இம்போர்டட் எல்லாம் நமக்கு சரி வராது... சும்மா எறும்பு கடிச்சாக் கூட இன்னும் அதிகம் கிக்கு இருக்கும்... இது நம்ம பேக்யார்டுல சிங்குடிங்க ரம்பா, ஜோதிகா, சிம்ரன்... சே சே... ஊர்வசி, மேனகை எல்லாம் சேர்ந்து காய்ச்சின லொகல்ஸ்... :D"

சி: "ஆஹா... நாரதா உனக்கு விவஸ்தையே இல்லைய்யா... இதை எல்லாம் கமுக்கமா எனக்கு தள்ளுவியா அதை விட்டுட்டு பசங்க இருக்குற நேரத்துல கொண்டு வந்து இருக்கியே..."

நா: "ஓஹோ .. ஜூனியர்ஸும் இப்போ போட்டிக்கு வந்துட்டாங்களா? அடடா... இது தெரிஞ்சு இருந்தா காச்சும் போதே எஃஸ்டிராவா காச்ச சொல்லி இருப்பேனே... இப்போ புதுசா காச்சினா இந்த பக்குவம் வராதே...."

பிள்ளையார் (பி): "நைனா... என்ன இது... என்னை விட்டுட்டு நாரதர் மாமா கூட ஏதோ பிளான் போடுற மாதிரி தெரியுதே..."

சி: "சே சே.. உன்னை விட்டுட்டா... இல்லப்பா... ஆனா சத்தம் இல்லாம சைலெண்டா வா... சின்னவனுக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்..."

முருகன் (மு): "நைனா... உமக்கு கோட்டருக்கும் சரியான மிக்சிங் சொல்லிக் கொடுத்தவனே நான் தான் ... என்கிட்டயேவா..."

நா: "அண்ணா... இருங்கண்ணா... இது இப்படி அடிக்கிற அயிட்டமா இருந்து இருந்தா நானே 4 கிளாஸ் எடுத்துட்டு வந்து இருக்க மாட்டேனா... இது சிங்கிள் மேன் சரக்கு... "

சி: "ஆரம்பிச்சுட்டான்யா... போச்சு... இனி இந்த சரக்கு உனக்கும் இல்லாம எனக்கும் இல்லாம எல்லாரும் மறந்துட்டு அண்டர்வேரோட ஆண்டியா நிக்கப்போகும் ஒருத்தன சமாதானம் பண்ண போகனும்.... அலையவிட உமக்கு வேற நேரமே இல்லையா??.. இதுல.. இது நம்ம பத்தினிக்குத் தெரிஞ்சா நான் வேஸ்டா தாண்டவம் ஆட வேண்டியது வரும்...!!!"

மு: "ஓஹோ.. என்னைப் பத்தி இப்படி ஒரு பில்டப் இருக்கா... சரி சரி... உங்க கூட இருக்குறதைவிட ஆண்டியா எனக்குன்னு சொந்தமா ஒரு சரக்கு ஸ்டோரேஜ் வெச்சு குஜாலா இருந்துக்குவேன்.... குட் பை...."

நா: "அய்யோ... முருகா.. என்ன இது... இந்த மாதிரி ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படி மொரிச்சுக்கலாமா.... வேணா ராசா..."

பி: "தம்பி... சரி விடு... ஆப்டரால் இது வெரும் சரக்கு... நீயே அடி... நான் வேணும்னா வெரும் வேர்க்கடலை தின்னுக்குறேன்... நில்லுடா... தம்பி..>"

பார்வதி (பா): "என்ன நடக்குது இங்கே... முருகா... எங்கே போற... நில்"

மு: "அம்மா... நீங்க எல்லாரும்தான் நில்லு நில்லுன்னு சொல்றீங்க... அப்பாவ பாரு... மூணு கண்ணும் சரக்கு மேலேதான் இருக்கு... இது இனி சரக்கப்பத்தி இல்லை... என் மேல எவ்வளவு அக்கறைன்னு இது காட்டலையா... நான் போரேன்...''

************************************************************************************

இடம்: பழமுதிர்ச்சோலை; சரக்கு காய்ச்சும் கிடங்கு
பார்ட்டீஸ்: முருகன் ... பார்வதியம்மா


பா: "முருகா... என்ன இது... எல்லாத்துக்கும் நான் உன் பின்னாடி வந்து வந்து கதை சொல்ல முடியுமா... நீ என்ன சின்ன பையனா... ஒன்னுக்கு ரெண்டு பிகர கணக்குப் பண்ணி இருக்கே... உங்க அப்பனுக்கே அந்த தைரியம் இல்லாமத்தான் ஒருத்திய ஒளிச்சு வெச்சு இருக்கார்..."

மு: '' அம்மா.. சும்மா அப்பாவ பத்தி கதகதையா சொல்லி என்னை சமாதானம் பண்ணலாம்மு நினைக்காதீங்க... இப்போ எனக்கே தனியா விளையாட்டு எல்லாம் தெரியும்.... சோ அவர் ஆடின விளையாட்டை வாய திறந்துகிட்டு கேட்கிற வயசு இல்ல எனக்கு சொல்லீட்டேன்"

பா: "தெரியும் கண்ணா... எனக்கு அது எல்லாம் போர் அடிச்சுப் போச்சு... பிளாஷ் பேக் சொல்லி சொல்லி ஒரே போர்.... ஆனா எனக்கு எப்பவும் போர் அடிக்காத ஒரு மேட்டர் என்ன தெரியுமா...?"

மு: "என்னதும்மா??"

பா: ''நம்ம செம்பு மன்னன் தான்... எதுக்கெடுத்தாலும் சந்தேகம்... இவன் சந்தேகத்த தீக்குறதுக்கே ஜனங்க தனியா ஒரு வரி கட்டுறாங்கன்னா பாரேன்..."

மு: ''ஹிஹி... அப்படியா... ??"

பா: "என்ன அப்படியாங்குறே... நான் போர் அடிக்கும் போது எல்லாம் லைவ் ஷோவே பாப்பேன்...!! அவ்ளோ ஏன்... இப்போ கூட ஒரு ஷோ இருக்கு... லைவ்... பார்க்கலாம் வா."

மு: "ஓ பார்க்கலாமே... யார் அங்கே ... நான் யூஸ்'ல இருந்து வாங்கிட்டு வந்த மூணு ரிக்லைனர்'ல இருந்து ரெண்ட இங்க போடுங்கப்பா... பிளஸ்... பெப்சி அண்ட் லேஸ் சிப்ஸ்.."

பா: "அது என்னடா...மூணு ரிக்லைனர்...??"

மு: "எத்தனை நாளைக்குத்தான் மயில் மேலையே உக்காந்து இருக்க... பிளஸ் ஒன்னு மட்டும் வாங்கினா ரெண்டு பேரும் மடியிலதான் உட்கார்வாங்க... அதுவும் இப்போ ஒருத்தியும் ஜிம் போறது இல்ல... எதுக்கு ரிஸ்க்கு... அதான் எல்லாருக்கும் தனியா வாங்கிட்டேன்..."

பா: "அறிவுடா உனக்கு... உங்க அப்பன் டப்சா கண்ணுல இருந்து வந்து இருந்தாலும்... எப்படி உனக்கு இவ்ளோ அறிவு..?"

மு: "எல்லாம் கார்த்திகை பெண்கள் கொடுத்ததும்மா..."

பா: "இருக்கும் இருக்கும்!! சரி செம்பு என்ன சீன் போடப் போறான்னு பாக்கலாம் வா"

***********************************************************************************

to be continued............................ :D

Sunday, August 20, 2006

கதை சொல்ல வந்தேன்!!!

வணக்கம் நண்பர்களே,

என்னடா தமிழ் இப்படி கொட்டுது?? பத்தாததுக்கு ஒரே செண்டி செண்டியா பொழியற'ன்னு என்னோட கிலோஸ் பிரண்ட்ஸ் மட்டும் இல்லாம எனக்கு கமெண்ட்ஸ் போஸ்ட் பண்ணின முகம் தெரியாத நண்பர்களும் ஒரே கேள்வி எழுப்ப... அடடா இதே ரேன்ஞ்ல போன நம்ம பிளாக்குக்கு முகாரின்னு பேர் வைக்க வேண்டியது வந்துடுமோன்னு ஒரு பீதி... :)

அதுனால இன்னைக்கு கொஞ்சம் லேச இருக்கட்டுமேன்னு ஒரு கதை... எனக்கு காமெடி எல்லாம் நடைமுறை போச்சுல தான் வரும்... எழுத ஆரம்பிச்ச கொஞ்சம் சீரியஸ் டாபிக்ஸ் தான் எழுதி இருக்கேன்...

என்னோட பழைய போஸ்ட் ஒன்னு.. உங்களோடு பகிர்ந்து கொள்ள... என்னக்கு கதை எழுத வருதான்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா.....

**********************************************************************************

நிறைவு

"ஏண்டி உனக்கு என்ன பைத்தியமா? இந்த சமுதாயம் என்ன சொல்லும்னு கொஞ்சமாவது யோசிச்சியா? இது நடந்தா வெளிய தலை நிமிர்ந்து நடக்கத்தான் முடியுமா??"

"அம்மா... என்னால என் வாழ்க்கையைப் பத்திதான் யோசிக்க முடியும், யோசிக்கனும். சமுதாயத்தப் பத்தி நான் ஏன் கவலைப்படனும்? என்னைப் பெத்தவங்க நீங்க, உங்களுக்கு மரியாதைக் கொடுக்க வேண்டியது என்னோட கடமை. அதான் உங்க கூட இதை பகிர்ந்துக்குறேன். உங்களோட ஆதரவு இல்லைனாலும் பரவா இல்லை... ஆசீர்வாதம் இருந்தா போதும்.."

"அப்போ எங்க அனுமதிகூட வேண்டாம் அப்படித்தானே"

"எதுவும் யாருடைய அனுமதி கேட்டு நடக்குறது இல்லம்மா. பிறப்பு, இறப்பு இதுக்கெல்லாம் அனுமதியா... அப்புறம் கடவுள் எதற்கு?"

"ஓஹோ வேதந்தம் பேசுறியா?"

"அம்மா... நான் இங்க வாதம் பண்ண வரல. என் முடிவு இதுதான்..."

"முடிவே பண்ணியாச்சா? அப்பறம் நாங்க என்ன சொல்ல? என்னங்க கேட்டீங்களா?"

"சரி கொஞ்சம் அமைதியா இரு கௌசல்யா. ஏம்மா லதா, இதுதான் உன்னுடைய முடிவா? நல்லா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தியா?"

"ஏம்ப்பா தப்பா.... ?"

"தப்பா சரியான்னு நீதாம்மா யோசிக்கனும். இந்த முடிவுனால நாளைக்கு உனக்கோ உனக்கு பிறக்கப் போகும் குழந்தைகோ என்ன கஷ்டங்கள் வரும், அதை எப்படி ஃபேஸ் பண்ணப் போற, இதை எல்லாம் யோசிச்சியா?"

"அப்பா... உங்க ஆசீர்வாதம் இருக்குற வரைக்கும் எனக்கு எந்த குறையும் வராதுப்பா"

"ஹம் சரிமா. உன் முடிவு இதுதான்னா என்னுடைய ஆசீர்வாதம், ஆதரவு எல்லாம் உண்டு. கோ அஹெட்"

"அம்மா??"

"லதா எனக்கு உன் சந்தோஷம் உன் நிம்மதி இதுதான் முக்கியம். அதுக்காக நீ என்ன செய்தாலும் ஒரு தாயா என் ஆதரவு என்னைக்கும் உனக்கு உண்டு."

"தேங்ஸ்ம்மா தேங்ஸ்ப்பா. உங்களுக்கு மகளா பிறந்ததுக்கு சந்தோஷப் படுறேன், பெருமையும் கூட. எல்லாப் பெண்களுக்கும் இப்படி அப்பா அம்மா இருந்தா எந்த பொண்ணும் தன் விதியை நினைத்து காலம் முழுக்க கண்ணை கசக்கிக்கிட்டு இருக்க மாட்டா."

===

எல்லாப் பொண்ணுங்களையும் போலதான் லதாவும். படிப்புல இவதான் முதல். ஆட்டம் பாட்டு விளையாட்டு எல்லாத்துலையும். காலேஜ்'லயும் அப்படித்தான். எல்லாம் நாங்க செய்த தப்பு, குமாருக்கு அவளைக் கல்யாணம் பண்ணிவெச்சது.

குமார்... நல்லவன்தான் ஆனா கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகியும் குழந்தை இல்லைன்னு அவங்க அம்மா இவளை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. குமாரும் செக்கப்புக்கு போனான். ரெண்டு பேருக்கும் குறை இல்லைன்னு டெஸ்ட்டு சொன்னாலும் குழந்தை பிறக்கலைனதும் குமாரோட அம்மாவோட பேச்சு எல்லாம் வேற மாதிரிப் போச்சு.

பொருத்துகிட்டுதான் இருந்தா லதா ஆனா கடைசி வரை பேச்சு குறைந்தபாடு இல்லை. அது மட்டும் இல்ல குமாருக்கு வேற கல்யாணம் பண்றதாக் கூட பேசி இருக்காங்க. அதுக்கு குமாரும் எதிர்ப்பு தெரிவிக்காததுனால விவாகரத்துக்கு ஒத்துகிட்டு பிரிஞ்சு வந்துட்டா.

அப்படிப் பிரிஞ்ச அப்பறம் கூட தனியாதான் தங்கி இருக்கா. வேலைக்கு போறா. பெரிய வேலை, கை நிறைய சம்பளம். விவாகரத்து ஆகிடுச்சுன்னு ஒரு நாள் அவ அழுது பாத்தது இல்லை. வேற கல்யாணத்துல அவளுக்கு ஈடுபாடும் இல்லை. மீறி கேட்டா, 'ஏன் ஆண் துணை இல்லாம வாழ முடியாதா?'ன்னு கேக்குறா. முடியாதுன்னு வாதாடினா, 'ஹூம், உன் மாப்பிள்ளையும் ஆம்பளைதான், அவன் என்ன என்னை வெச்சு காப்பாத்தி கிழிச்சுட்டான்... இனி புதுசா ஒருத்தன் வந்து கிழிக்க?'ன்னு கேக்குறா.

ஆனா இப்போ என்ன தோனுச்சோ தெரியல இந்த முடிவுக்கு வந்துட்டா...

===

"டாக்டர்.. இது என் அம்மா. அம்மா, இவங்கதான் டாக்டர் சந்திரா"

"வணக்கம்மா..."

"வணக்கம் டாக்டர். டாக்டர்... இவளோட இந்த முடிவுனால... இவளுக்கு...?''

"கவலைப்படாதீங்கம்மா. இது ஒரு மெடிகல் அட்வான்ஸ்மெண்ட் அவ்ளோதான். வேற எந்த பிரச்சனையும் இதுல இருக்காது. இன்பேக்ட் அந்த பார்டி யாருன்னு இவங்களுக்கோ இல்லை இவங்களைப் பத்தி அவங்களுக்கோ தெரியவே தெரியாது"

"டாக்டர்... இதைப் பத்தி நீங்க அம்மா கிட்ட விவரமா பேசுங்க. நான் செக்கப் எல்லாம் பண்ணிட்டு வரேன்"

"ஓகே லதா... ஆல் த பெஸ்ட்"

===

"லதா செக்கப் எல்லாம் முடிஞ்சுடிச்சு. கங்கிராஜுலேஷன்ஸ் யூ ஆர் வெரி ஹெல்தி அண்ட் பிட் பார் த பிராசஸ்"

"ரொம்ப சந்தோஷம் டாக்டர்... எப்போ ஆரம்பிக்கலாம்?"

"நீங்க எப்போ இதுக்கு ரெடியோ, அன்னைக்கே"

"ஓகே டாக்டர்... வர சனிக்கிழமை வரேன்"

"குட் இனஃப்"

"வரேன் டாக்டர்"

"ஓகே சியூ தென்"

===

விவாகரத்து வாங்கி ரெண்டு வருஷம் ஆகுது. குமாருக்கும் அவன் அத்தை பொண்ணு கமலாவுக்கு அப்போவே கல்யாணம் ஆனதா கேள்வி. இன்னும் அவங்களுக்கும் குழந்தை இல்லையாம்.

"எல்லாம் செஞ்ச பாவம். அதான் வயத்துல ஒரு பூச்சி புளு தங்க மாட்டேங்குது. இந்த தருத்திரத்தைத் தேடிப் பிடிச்சு என் மகனுக்குக் கட்டி வெச்சு அவன் வாழ்க்கையையும் கெடுத்துட்டேனே"

அத்தை பேசியது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

"அம்மா...
உனக்காய்...
உன் நினைவில் கருவாய்...
நான் வாழ்ந்த வாழ்க்கை போதும்..

உன் பூங்கரங்களில்
என்னை அள்ளி நீ கொஞ்ச...
பூரிப்பில் நீ விடும் கண்ணீர்
தரை தொடும் சப்தம்
அதைக் கேட்டுத் தூங்க ஆசையாய்
உன் மகள் வளர்கிறேன்"

என்றோ டைரியில் எழுதியது... இன்று புரட்டிப் பாக்கத் தோன்றியது...

பெண்மையின் முழுமையை உணர்வதில் எந்த பெண்ணுக்குத்தான் கனவுகள் இருக்காது. கண்களைத் திறந்து கொண்டே கனவுகாணத் தொடங்கினேன்.

===

"ஹேய் உங்க அப்பா யாருடா?"

"என்ன அப்பா பேர் தெரியாதா? ஏன் உங்க அம்மா சொல்லவே இல்லையா...?"

"அப்பன் பேர் தெரியாதவனா நீ... ஹஹஹஹ?"

"அம்மா.... அம்மா... எல்லாரும் என் கிட்ட அப்பா யாருன்னு கேக்குறாங்கம்மா... யாரும்மா என் அப்பா? யாரும்மா??"

திடுக்கிட்டுக் கண் திறந்தேன். எதிரில் அப்பா.

"என்னம்மா. உன் மகன் அப்பா யாருன்னு கேக்குறானா. என்ன சொன்ன? நிஜமாவே கேட்டா என்ன சொல்லுவே?"

அமைதியாய் நின்றேன். என்ன சொல்லுவது என்று திணறல் இல்லை. எப்படிச் சொல்லுவது என்ற தேடல்.

"அப்பா... இப்படி ஒரு குழந்தையைப் பெற்று எடுக்குற தைரியம் இப்போ எனக்கு இருக்குன்னா- இதை அவன் கேட்கும் போது சொல்லவும் எனக்கு தைரியம் இருக்கும். எனக்குப் பிறந்த அவனால இதைக் கேட்கவும் புரிஞ்சுக்கவும் தைரியம் இருக்கும். எதுக்காகப்பா நான் பயப்படனும்?"

கண்கள் கலங்கியது அப்பாவிற்கு

===

இன்று சனிக்கிழமை.... கருவுற்றேன்.

எத்தனையோ நாட்கள் அந்த நிலாவைப் பார்த்தது உண்டு. ஆனால் இன்று முதல் முறையாய் அந்தப் பௌர்னமி நிலவைப் பார்த்த போது... போடி! நானும் நிறைந்துள்ளேன் என்று சொல்லத் தோன்றியது.

இதைக் குமாருடன் இருக்கும் போதே செய்து இருக்கலாமே என்று உலகம் பேசியது...

இப்படி வாய்ப்புகள் இருந்தும், குறை இல்லை என்று தெரிந்தும், மறுமணம் செய்ய தடை சொல்லாத ஒரு சுயநலம் பிடித்த படித்த முட்டாளுக்காக... நான் உடல் கொடுத்த என் கருவிற்கு அவன் உயிர் கொடுத்து அதை நான் சுமந்திருந்தாலும் ஒரு நாள் அதில் சந்தேகம், ஒரு கசப்பு பிறக்கும்...

ஆனால் இன்று... என் குழந்தை.. எனக்கே எனக்காய்.... சந்தேகம் இன்றி...

பிறந்தான் பரத்....

இரண்டு வருடங்கள் ஓடின. அவனுக்கு கூட விளையாட தங்கை வேண்டுமாம். தத்தெடுத்தேன் பாரதியை.

ஆஸ்திக்கொன்று... ஆசைகொன்று!!

***********************************************************************************

ஹிஹிஹி... இதுவும் ஹெவி மேட்டர்தான்.... ஆனா கதை!!!

கொஞ்சம் காமெடியா எழுத ஒரு டொபிக் சஜஸ்ட் பண்ணுங்களேன்....

Wednesday, August 16, 2006

புதுக் காதல்!!

அழகினை கடன் வாங்கி
இளமையில் விதைத்து வைத்தேன்
காலமென்னும் கண்ணாடி
முதுமையின் கோடுகள் காட்டுதம்மா

உடல் என்னும் பொய் நம்பி
வண்ண ஆடைகள் நெய்து வைத்தேன்
நிழல் என்னும் நிஜம் தொடர
கண்ட கனவுகள் கருத்ததம்மா

விழி என்னும் வாசல் வழி
அவர் வரவென்னும் தேடல் கொண்டேன்
வழி மாறி போனார் என்று
மண விருந்துண்டோர் சொன்னாரம்மா

உயிரென்றும் ஊனென்றும்
நம் உறவினைக் கண்டு வந்தேன்
வெறும் உடல் என்று எனைப் பிரித்தார்
என் பெண்மை சிறுத்ததம்மா

கலையாத நித்திரையாம்
நான் கொண்ட காதலுக்கு,
இனி புதுக் காதல் சொல்லிடுவேன்
தித்திக்கும் தேன் தமிழில்

தமிழ்மீது நான் கொண்டேன்
தனியாத ஒரு மோகம்
கவிபாடி தேடிடுவேன்
கலப்பியலின் புது இலக்கணம்

-கன்யா

Wednesday, August 09, 2006

அழகிய பெண்ணே

இதுவரை வாழ்ந்த உறவுகளின்
வலிமை தெரியவில்லை
என்றோ விட்டுச் சென்ற வரவுகளின்
வேதனை முடியவில்லை

காதலைக் கண்டிருக்கிறேன்
தோல்வியின் காயங்கள் சுமந்திருக்கிறேன்
காமனின் கலை பயின்று
மோகத்தின் சூது வென்றிருக்கிறேன்

என்னைக் கொண்டவளை
நினைத்து பிரம்மித்திருக்கிறேன்
என்னோடு வந்தவளை
கொண்டாடி மோகித்திருக்கிறேன்

ஆனால் மகளே,
இன்று என்னிரு கரம் கொண்டு
உன்னை ஏந்தி நிக்கையிலே
ஓடும் குருதி அனைத்தும்
உள்ளங்கையில் உருகி நிக்குதடி

கருவாக நீ வளர்கையிலே
முன்னூரு நாள் உன் தாய் பட்ட பாடு
இன்று பற்றிய என் விரலை
நீ விட்ட ஒரு கனத்தில் நான் உணர்ந்தேன்

பிறந்த மருகனமே
பெற்றவளின் மார்பு தெரியும் உனக்கு
ஆனால் கருப்பையுடன் தினம் பேசிய என்னை
உன் தாய் சொல்லித்தான் தெரியுமோ கண்ணே

காலமெல்லாம் கண் விழிப்போன்
கண்மணியே உனைக் காண
இமை மூடும் ஒரு கனத்தில்
தொலைப்பேனோ உன் பிம்பம்

தாயவளின் அழகு கொண்டு
தாமரையாள் மேனி தந்த
உன் அழகைப் பாத்ததும்
சந்திரனும் இருண்டதம்மா

சித்திரமாய் நீ சிரிக்க
விண்மீனும் சிறைபடுமாம்
செவ்விதழ் நீ மலர
குயிலினங்கள் மௌனமாம்

புன்னையிலைப் பாதம் வைத்து
சின்னவள் நீ நடந்து வர
மயிலினங்கள் பறந்ததம்மா
மானினமும் தொற்றதம்மா

மனையாளும் பிறந்த பொன்மகளும்
என் இரு கண்களாய் கொண்டு
இனி காலமெல்லாம் அடைகாப்பேன்
என் மகளே நீ உறங்கு!!

- கன்யா

Sunday, August 06, 2006

சுமக்கும் கனவுகள்

கண்டேனடி நான் கண்டேனடி
காணி நிலமொன்று விளைந்திருக்கக்
கண்டேனடி

சொன்னாரடி பிறர் சொன்னாரடி
அருவடைக் காலம் பிறந்ததென்று
சொன்னாரடி

கொண்டேனடி காதல் கொண்டேனடி
எதிர்காலம் தனைக் கண்டு மையல்
கொண்டேனடி

வெண்பொங்கல் பொங்கி வர
மஞ்சள் காடாய் விளைந்திருக்க
வீதியெல்லாம் தோரணமும்
மங்கலமாய் ஒலி முழங்க

கஜபதியான் பன் னீர்தெளிக்க
கலைவேந்தர் இசை வெதும்ப
மக்கட்கெல்லாம் விருந்தோம்ப
பட்டும் பொன்னும் பவனி வர

காலத்தை கனித்து சுப முகூர்த்தம் குறித்து
வேதம்தனை ஓதி மேலோர் ஆசி கூற
மன்னவனாம் அய்யன் தம்கரம் பற்றி
மணநாள் கொண்டு மலரக் கனாகண்டேன்

**************************************************************
இயற்கையின் பெண்மையை மோகம் தீண்டிச் செல்ல
குளிர் தென்றல் வந்து அள்ளி முத்தமிட்டு தணிக்க
இட்ட முத்தத்தின் ஈரம் பனித்துளியாய் உறைந்திருக்க
அதை மாலையாய் கோர்த்து இரவெல்லாம் எண்ணியிருந்தாள்

ஆதவனின் கதிர் எழும்பி துளைத்ததும்
உடைந்த முத்துக்களை தொலைத்த துயரம் வாட்ட
இனி காதலன் சபரிசம் வேண்டி
அவள் கொண்ட பசலைநோய் என்னவென்று சொல்வதம்மா

நானும் அவளைப் போல் கன்னியன்றோ
கண்களில் நான் வாங்கி வந்த சாபம்
கனவுகளாய் என் இரவுகளைச் சுட
உரக்க ஒலித்த நிசப்த்தம் என் துயில் கொண்டு சென்றது

உன் நினைவுகளில் ஒருகனம் இன்புற்றிருக்க
மருகனம் ஏனோ இந்த இளமை கணத்தது
கொண்ட காதலை நெஞ்சம் சுமக்கையிலே
இந்த கனவுகளை சுமப்பது வலித்திடுமோ!!

-கன்யா

Sunday, July 30, 2006

காலன் அழைக்காத ஒரு மரணம்!!

சில காலமாய்
மார்பின் நடுவில்
மார்கழியாய் பனி வீசினாய்

இன்றோ
உயிருக்குள் தீப்பொறி ஒன்றை
விதைத்துச் சென்றாய்

திறக்காத புத்தகமாய்
நான் இருந்தேன்
பக்கங்களில் எல்லாம்
உன் ரேகை பதித்தாய்

பாதியில் முடிவுரை
எழுதிவிட்டு
என் உணர்வுகளை
சபித்துச் சென்றுவிட்டாய்

காதலைச் சுமக்க
நான் முயன்றபோதெல்லாம்
உடைந்து கொண்டிருந்தது
என் இதயம்

இனி சிதைவதற்கு மீதம் இல்லை
உரைந்த குறுதியில் சிதறிய துகள்களில்
மிஞ்சியது ஏனோ வெரும் காயம்

மரித்த இதயமும்
உணர்வுக்ளை மறத்த காயமும்
உன்னோடு மட்டும் அல்ல
எவரோடும் உறவாடக்
கொண்டதல்ல

இனி காலனின் அழைப்பு வரும் வரை
காயமே நீ வலித்திரு
இந்த வலி மட்டுமே
நீ வெரும் காகித கப்பல் என்பதை
உனக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும்

சொந்தங்களே
என் கல்லறையின் கல்வெட்டுகளில்
பதியுங்கள்
இங்கு சடலத்தைப் புதைத்தோம்
என்று!!!

Thursday, June 29, 2006

காலத்தை வென்ற மெட்டுக்கள்

"கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணுக்கு தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை" ---- வானம்பாடி

மீராவைப் போல ஒருவரை இந்த அளவுக்கு எப்படிக் காதலிக்க முடியும் என்று வாதாடிக் கொண்டிருந்த எனக்கு, அப்படி ஒரு காதலை அறிமுகப்படுத்திய ஒரு இனிமையான பாடல். உள்ளத்தை தொலைத்துவிட்டு, உணர்வுகளில் மட்டுமே அவள் தேடிக் கொண்டிருந்த கண்ணன். காதலின் நினைவுகளில் உறைந்து இருக்கும் இவளின் உயிரைத் அவனது கீதம் தொட்டவுடன், ஒரு முறை அவன் முகம் பார்க்க மாட்டேனா என்று தவிக்கும் பெண்மையை இதைவிட அழகாக சொல்ல முடியாது.

காதலில் கலந்த இருவரின் உள்ளம் தயக்கம் இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ள தனிமை தேவை. அந்த தனிமை இருவரின் இடையில் பேசிய கவிதை இதோ

"ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே" ---- கர்ணன்

எல்லா ஆழமான உறவும் ஒரு பிரிவை சந்தித்து இருக்கும்.. இப்படி பிரிந்து இருக்கும் காலத்தில் நமக்கும் ஏற்படும் வலி, நமக்குள் பிறந்த காதலை நமக்கே அறிமுகம் செய்யும். இந்த வேதனையை சொல்ல எத்தனையோ பாடல்கள் உண்டு.. என் நினைவில் என்றும் இருக்கும் சில பாடல்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள..

"தன் உயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை
என் உயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
நான் என் உயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்" ---- தாழம்பூ

"பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன் சிந்தை வாடலாணேன்
தூது செல்லும் யாரும் சேதி சொல்ல காணேன்" ---- மன்னாதி மன்னன்

"மலருக்கு தென்றல் பகையானால்
அது மலர்ந்திட கதிரவன் துணை உண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேரே வழி ஏது!!" ---- எங்க வீட்டு பிள்ளை

இப்படி நிறைய பாடல்கள், சொல்ல நாட்கள் போதாது. கண்ணதாசன் அவர்களின் பாடகளை கேட்டுக் கொண்டிருந்தால் தமிழின் மீது ஒரு காதலே வந்துவிடும்..

"அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை" ---- புதிய பறவை

அன்றே சகுந்தலைக்கு கண்ணதாசனைத் தெரிந்திருந்தால் அவள் காதலை நினைவூட்ட மோதிரம் தேவைப்பட்டிருக்காது.

இதயம் கலந்து, கனவுகள் சுமக்கும் ஒரு பெண், தன் மணநாள் வேண்டி காத்திருக்கும் வேளையில் அவளை வாழ்த்தி பாட உறவுகள்தான் தேவையா... வளையல்காரன் கூட வாழ்த்துகிறான்

"கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்
அம்மா.. பூவோடு வருமே பொட்டோடு வருமே
சிங்கார சின்ன வளையல்" ---- படகோட்டி

தோழிகள் கூடி, புத்தாடை உடுத்தி, அழகாக அலங்கரித்து, கேலிகளில் சிரித்து, காதோடு அறிவுரை சொல்ல வந்த பாடல்..

"வருவார் வருவார் பக்கம்
உனக்கு வருமே வருமே வெட்கம்
தருவார் தருவார் நித்தம்
இதழ் தித்திக்க தித்திக்க ....

யாரோ சொன்னார் கேட்டேன்
நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்
நானாய் சொன்னது பாதி
இனி தானாய் தெரியும் மீதி:" ---- கற்பகம்

காதல் வந்ததும், மணநாள் கண்டதும்.. இனி அவளுக்குள் ஒரு புது மோகம்.. தாய்மையைத் தொட்டுவிட

"மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளி போல்
பிள்ளை உருவானதே" ---- கர்ணன்

தன் நினைவுகளில் அவள் வரைந்து வைத்த பிள்ளை ஓவியம் இன்று தன் மடியில் தவழ்ந்திட, முன்னூறு நாள் தவம் இருந்து அவள் பேச நினைத்த அத்தனையும் தாலாட்டாய் ஒலித்திடும்

''இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
ஒரு பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்" ---- நீதிக்கு தலை வணங்கு

"காலமிது காலம் இது
கண் உறங்கு மகளே
காலம் இதை தவற விட்டால்
தூக்கம் இல்லை மகளே" ---- சித்தி

பாடலில் கதை சொல்வதும் அதையும் அழுத்தி சொல்வது ஒரு கலை..

"தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா?
தெருவினிலே விழுந்தாலும்
வேரோர் கை தொடலாமா?" ---- நெஞ்சில் ஓர் ஆலயம்

"காற்றில் உதிர்ந்த வண்ண மலர்
கண்ணீர் சிந்தும் சின்ன மலர்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா....

அலையில் மிதந்த மலர் கண்டு
அதன் மேல் கருனை மனம் கொண்டு
தலையில் இறைவன் சூடிக் கொண்டான்
தானே அதனை சேர்த்துக் கொண்டான்..." ---- இரு மலர்கள்

தமிழை அமுதென்றும், இன்பத்தமிழ் உயிருக்கும் மேல் என்றும் பாடிய கவிஞ்ர்கள்..

"நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி
நடந்த இளம் தென்றலே வளர்
பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே" ---- பாசமலர்

என்று பாடல்களை அள்ளி கொடுத்து, தமிழைத் தாலாட்டி வளர்த்து இருக்கிறார்கள். இந்த பாடலாசிரியர்கள் காலத்தை வென்று இன்றும் நம் இதயத்துடிப்பில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்றும் இனிய நினைவுகளோடு,
கன்யா

Friday, March 03, 2006

நான்!!

நான்

நேற்றுவரை அனுமதி கேட்டிருந்தேன்
இன்று சில காலமாய்
சுயமாய் சுவாசித்துவிட்டேன்

நினைவுகளின் வண்ணங்களில் வாழ்ந்த எனக்கு
நிஜத்தின் கறுப்பு வெள்ளை கற்றுகொடுத்த பாடம்
சில நேரங்களில் தனிமை கூட சுகமென்று
******************************************************************
இன்று...

நான் பறவை
வானமும் பூமியும்
என் சிறகுகளில்

நான் காற்று..
தென்றலும் புயலும்
என் வேகத்தில்

நான் மேகம்
மென்மையும் மேன்மையும்
என் பெண்மையில்

நான் மழை
ஈரமும் தூறலும்
என் அன்பில்

நான் கடல்
அளவும் ஆழமும்
என் தேடலில்

நான் நெறுப்பு
சுடுவதும் சுடர்விடுவதும்
என் கண்களில்
******************************************************************
பெண்மையின் முழுமையை
நானாக வாழ நினைக்கிறேன்
சமுதாயத்தின் விதிமுறைகள் இல்லாமல்

வாழ்க்கையின் இலக்கணங்களை
புறிந்துகொள்ள ஆசைப் படுகிறேன்
சடங்குகள் சம்பிரதாயங்களில் சிறை படாமல்

புரட்சி அல்ல என் நோக்கம்
எனக்குள் என்னை தேடிக் கொண்டிருக்கிறேன்
அதை வட்டதுக்கு வெளியில் வந்து தேடுகிறேன்

இன்னும் தேடுவேன்!!!