Thursday, August 31, 2006

சிரிவிளையாடல் - 2

இடம்: பாண்டியன் அந்தப்புரம்
பார்ட்டீஸ்: இது குசும்புதானே... வேற யாரு இருப்பா Mr. & Mrs. செம்புப்பாண்டியன் தான்

Mr.: "மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு"

Mrs.: அய்யோ.. என் மட மன்னா.. நமக்கு கல்யாணம் ஆகி ரொம்ப காலம் ஆகுது... பாட்டையும் பாடுற ஆளையும் பாருங்கப்பா!!!

Mr.: ஓ... சாரி.. பாட்டு சரிதான்... ஆனா லொகேசன்.. பிகர் இதுதான் மாறி போச்சு...

Mrs.: என்னது?????????!!!!!!!!!!!!

Mr.: இல்ல இல்ல.. நான் மடையன்னு சொன்னேன்!!!

Mrs.: ம்ம்.. அது!!

Mr.: 'சரிம்மா.. எனக்குதான் பாட வராது... நீயாவது ஒரு ரொமாடிக் பாட்டு ஒன்னு பாடேன்... அதுல நானும் இருக்கனும்... நம்ம நாடும் இருக்கனும்..

Mrs.: ம்ம்.. சரி "மதுரை மரிக் கொழுந்து வாசம்
என் ராசாவே உன்னுடைய நேசம்..."

Mr.: இரு இரு... இது யாரோட லிரிக்ஸ்?? TR எழுதினதா??

Mrs.: சே சே.. இல்லீங்க... நம்ம வைரமுத்து ..

Mr.: ஏதேது.. நம்மவா... ??

Mrs.: அடச்சே.. நீங்களும் உங்க புத்தியும்..

Mr.: இல்லம்மா.. சும்மா ஒரு அடுக்குமொழியா வருதுங்குறதுக்காக என் நேசத்துக்கு எப்படி மரிக்கொழுந்து வாசம் வரும்??

Mrs.: ஓஹோ... சந்தேகமா... சரிதான் இன்னைக்கு நான் பாட்டை முடிச்ச மாதிரிதான்... நாம கசாஃஸ் பண்ணின மாதிரித்தான்!!!

Mr.: நோ நோ... இந்த மாதிரி மேட்டர்'ல எல்லாம் சந்தேகமே வரக்கூடாது... வந்தா கேக்குறது மா.புதம் கூட இப்போ இல்ல!! சோ... நம்ம புலமை வேந்தர்களைக் கேக்க வேண்டியதுதான்...

Mrs.: மண்ணாங்கட்டி... உங்க தமிழ் மன்றதுல இருக்குறது எல்லம் பல்லு போன வெந்தாடிக் கேசுங்க... இதுல சிலது சிங்கிள் மேன் ஷோ வேற... இந்த சந்தேகதுக்கு அவங்க பதில் சொல்லீட்டாலும்...!!

Mr.: ஓஹோ.. அது வேற இருக்கா... சரி எப்பவும் போல பொற்கிளிதான்...

Mrs.: இதுக்கு மேல உங்க சந்தேகம் தீற நீங்க பொற்கிளி கொடுத்துகிட்டு இருந்தா அப்பறம் கஜானா காலியாகும்... ஜனங்க உதைப்பாங்க!!!

Mr.: என்ன என்ன... கஜாலாவா... !!

Mrs.: அடச்சே... கஜானா.... (செவிட்டு டாஷ்!!!)

Mr.: ம்ம்.. கேட்குது!!! அப்போ என்ன பண்ணலாம்... ஐடியா!! யார் அங்கே...

************************************************************************************

இடம்: அவர் அவர் வீடு (லொகல் அனௌஸ்மெண்டு மீடியா - வாக்கி டாக்கி மாதிரி ஆனா எல்லாருக்கும் இருக்கு!! )

பார்ட்டீஸ்: நம்ம அறிவிப்பாளர் (பிகர்தான்!!), கேட்டுகிட்டு இருக்குற பொது மக்கள்... எப்பவும் போல தருமி!!!

அ: வணக்க்க்க்க்கம்... பாண்டியன் சந்தேகம்... அறிவிப்பது க்க்கமலா (இந்த டையலாக்கை எப்படி படிக்கனுமோ அப்படி படீங்கப்பா!!! சன் டிவி செய்தி வாசிப்பாளர் .. நியாபகம் வருதா!!)

எல்லாரும் கவனிக்கிறாங்க

அ: எப்பவும் போல இப்பவும்... எல்லா விஷயத்தைப் போல இந்த விஷ்யத்திலும்... எல்லருக்கும் தெரிஞ்ச, நம்ம பாண்டிய மன்னருக்கு மட்டும் தெரியாமப் போன...

த: அம்மா தாயே... மேட்டருக்கு வாருவியா... இல்ல இது இந்த வாரம்... மேட்டர் அடுத்த வாரம்ன்னு மெகா சீரியல் மாதிரி சொல்லிட்டு போவியா?

அ: (ஒரு சிறு சினுங்கள் சிரிப்பு) சாரி... மன்னருக்கு சந்தேகம்... தீர்த்து வைப்பவர்களுக்கு ஐந்து பிகர்கள் பரிசு!!! (புதுசு கண்ணா புதுசு.. சவுண்டு டிராக்)

த: ஆஹா.. ஆத்தா கமலா.. பரிசு என்ன... ஒரு தடவ ரிபீட்டு...

அ: ம்ம்.. நீங்க கேட்டது சரிதான்... ஐந்து பிகர்கள்!!!

த: ஆ ஆ... சொக்கா...

அ: யோவ் நில்லு... கேள்வியே என்னன்னு இன்னும் சொல்ல விடல... அதுக்குள்ள சொக்காவாமா.. உன் சொக்கர் என்ன திருட்டு கொஸ்டீன் பேப்பர் பிரிண்ட்டு போடுறாரா?? நம்ம அரசருக்கே எப்போ எந்த சந்தேகம் வரும்ன்னு தெரியாது!!

த: சாரி... சொல்லும்மா...

அ: ம்ம்.. ஆதாகப்பட்டது... ஒரு தலைவன்.. தன் தலைவி மீதோ.. இல்ல ஸ்டெப்பினி மீதோ அதிகமான அன்பு (நேசம்) வைக்கும் போது.. அதுக்கு மதுரை மரிக்கொழுந்தோட வாசனையை உவமையா சொன்ன அது சரியா!!

த: சே.. இது என்ன ஜுஜுபி மேட்டர்.. இதுக்கு சொக்கன் வேண்டாம் நானே எழுதுவேன்... இருந்தாலும் அவர் எழுதினா ஒரு கெத்தா இருக்கும்...

அ: என்னவோ பண்ணித்தொல....

************************************************************************************

இடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாடம்
பார்ட்டீஸ்: தருமி... சொக்கன்

த: சொக்கா.. சொக்கா.. எங்கே போன... நாயாக் கத்துறேன் உனக்கு கேக்குதா இல்லையா!!! அய்யா... வா ராசா வா... அம்மா மீனாட்சி... கொஞ்சம் சின்ன பிரேக் விட்டு அவர இங்க கொஞ்சம் அனுப்பி வையேன்...

அசரீரியா நம்ம பார்வதியம்மா: டேய் தருமி.. உனக்கும் உன் மன்னனுக்கும் தான் வேலை இல்ல... எனக்குமா... நான் என்ன சொக்கன முந்தானையிலயா முடிஞ்சு வெச்சு இருக்கேன்... கலட்டி விட... தேவையில்லாம என்னை இழுக்காதே... நான் பிசியா சீன் பார்த்துகிட்டு இருக்கேன்...

த: சாரிம்மா... மெகா சீரியலா... எங்க வீட்டுக்காரியும் இப்படிததான்... சமையல் கூட பண்றதே இல்லை... என்னைப் பார்த்தாவே தெரியுமே.. எஃசரே இல்லாம எலும்பு தெரியுதே.... யூ கண்டினியூ.....

த: சொக்கா... சீக்கிரம் வா!!

சி: யோவ் தருமி... உனக்கு ஒரு நேரம் காலமே இல்லையா... இப்போதான் முருகன் புண்ணியத்துல என்னோட மொத பத்தினி பிசியா சமாதானம் பண்ண போய் இருக்கா... இதுதான் சான்ஸ்சுன்னு இப்போத்தான் கங்கையில நீராடிகிட்டு இருக்கேன் (கண்ணடிக்கிறார்)... இப்போ எதுக்கு இந்த கூவல்?

த: என்ன சொக்கா.. உனக்கு இருக்குற தெரமை என்ன... அறிவு என்ன... ஆப்டரால் ஒரு சிங்கிடியா... இன்னும் ரெண்டு இருந்தா எப்படி இருக்கும்...

சி: ரெண்டா?? அப்போ மீதி மூணு...

த: அட உனக்கும் தெரியுமா.. நான் தெரியாதோன்னு என்னக்கு ஒரு ரூட் போட்டேன்!!

சி: மூச்சுவாங்க கேள்வி கேட்ட அப்பறமும் என்னை பத்தி உனக்கு புரியல இல்ல... சரி விடு... மேட்டருக்கு வா...

த: சரி சரி... உனக்கு மூணு எனக்கு ரெண்டு...

சி: டேய்.. இது ரொம்ப ஜாஸ்தி.. உன் சைஸ்ச பாரு... இதுல நீ செட்டப்பா வேற இருக்கப் பிளான் போடுறியா... நாலு எனக்கு.. வேணும்ன்னா நீ ஒரு பிகர தள்ளிகிட்டு போ

த: சொக்கா.. இது கொஞ்சம் டூமச்சா தெரியல... ஏற்கனவே ரெண்டு.. இப்போ நாலா??

சி: நம்ம யாரு... அதான் இவ்ளோ முடி இருக்கு இல்ல... லொகேசனுக்கு ஒன்னா ஒலிச்சு வெச்சுக்க மாட்டேன்!!!

த: சரி சரி... இப்போ என்ன பண்ணலாம் அதை சொல்லுங்க!!!

சி: ஹ்ம்... தண்ணில தண்ணியடிச்சுகிட்டு இருந்தவன கூப்பிட நானும் கட்டின டர்க்கி டவலோட வந்துட்டேன்... என்னோட PDA'ல தான் சொம்போட.. சே செம்போட எல்லா சந்தேகத்துக்கும் FAQ போட்டு வெச்சு இருக்கேன்... இரு வரேன்!!

************************************************************************************

அடுத்த போஸ்ட்... ஒரு சிரிவிளையாடல் டுவிஸ்டுடன் வரும்!!!!!..................:D

Thursday, August 24, 2006

சிரிவிளையாடல் - 1

இடம்: சிவலோகம்
பார்ட்டிங்க: நாரதர்... சிவபெருமான்.. பிள்ளையார்... முருகன்... பார்வதியம்மா
சீன்: இப்பவே சீன் போட்ட அப்பறம் என்னதுக்கு மேல படிக்கிறது... சோ.. படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க....


************************************************************************************

நாரதர் (நா): "ஞானப் பழத்தைப் பிழிந்து...."

ஆடியன்ஸ்: "அய்யா நாரதரே.... நிறுத்தும்மையா உம் சகுநி வேலையை... இதை நாங்க நடிகர் திலகம் சிவாஜி அய்யாவோட திருவிளையாடல்-1'லயே பார்த்தாச்சு... புதுசா ஏதாவது சொல்லுங்க..."

நா: "அப்படியா அப்போ இது புதுசு கண்ணா புதுசு.... சிங்காரி சரக்கு நல்ல சரக்கு.. சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு..."

சிவபெருமான் (சி): "என்ன நாரதா, புதுசா இம்போர்டட் சரக்கா... ? இந்த ஆட்டம் ஆடுறே"

நா: "அட நீங்க வேற... இம்போர்டட் எல்லாம் நமக்கு சரி வராது... சும்மா எறும்பு கடிச்சாக் கூட இன்னும் அதிகம் கிக்கு இருக்கும்... இது நம்ம பேக்யார்டுல சிங்குடிங்க ரம்பா, ஜோதிகா, சிம்ரன்... சே சே... ஊர்வசி, மேனகை எல்லாம் சேர்ந்து காய்ச்சின லொகல்ஸ்... :D"

சி: "ஆஹா... நாரதா உனக்கு விவஸ்தையே இல்லைய்யா... இதை எல்லாம் கமுக்கமா எனக்கு தள்ளுவியா அதை விட்டுட்டு பசங்க இருக்குற நேரத்துல கொண்டு வந்து இருக்கியே..."

நா: "ஓஹோ .. ஜூனியர்ஸும் இப்போ போட்டிக்கு வந்துட்டாங்களா? அடடா... இது தெரிஞ்சு இருந்தா காச்சும் போதே எஃஸ்டிராவா காச்ச சொல்லி இருப்பேனே... இப்போ புதுசா காச்சினா இந்த பக்குவம் வராதே...."

பிள்ளையார் (பி): "நைனா... என்ன இது... என்னை விட்டுட்டு நாரதர் மாமா கூட ஏதோ பிளான் போடுற மாதிரி தெரியுதே..."

சி: "சே சே.. உன்னை விட்டுட்டா... இல்லப்பா... ஆனா சத்தம் இல்லாம சைலெண்டா வா... சின்னவனுக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்..."

முருகன் (மு): "நைனா... உமக்கு கோட்டருக்கும் சரியான மிக்சிங் சொல்லிக் கொடுத்தவனே நான் தான் ... என்கிட்டயேவா..."

நா: "அண்ணா... இருங்கண்ணா... இது இப்படி அடிக்கிற அயிட்டமா இருந்து இருந்தா நானே 4 கிளாஸ் எடுத்துட்டு வந்து இருக்க மாட்டேனா... இது சிங்கிள் மேன் சரக்கு... "

சி: "ஆரம்பிச்சுட்டான்யா... போச்சு... இனி இந்த சரக்கு உனக்கும் இல்லாம எனக்கும் இல்லாம எல்லாரும் மறந்துட்டு அண்டர்வேரோட ஆண்டியா நிக்கப்போகும் ஒருத்தன சமாதானம் பண்ண போகனும்.... அலையவிட உமக்கு வேற நேரமே இல்லையா??.. இதுல.. இது நம்ம பத்தினிக்குத் தெரிஞ்சா நான் வேஸ்டா தாண்டவம் ஆட வேண்டியது வரும்...!!!"

மு: "ஓஹோ.. என்னைப் பத்தி இப்படி ஒரு பில்டப் இருக்கா... சரி சரி... உங்க கூட இருக்குறதைவிட ஆண்டியா எனக்குன்னு சொந்தமா ஒரு சரக்கு ஸ்டோரேஜ் வெச்சு குஜாலா இருந்துக்குவேன்.... குட் பை...."

நா: "அய்யோ... முருகா.. என்ன இது... இந்த மாதிரி ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படி மொரிச்சுக்கலாமா.... வேணா ராசா..."

பி: "தம்பி... சரி விடு... ஆப்டரால் இது வெரும் சரக்கு... நீயே அடி... நான் வேணும்னா வெரும் வேர்க்கடலை தின்னுக்குறேன்... நில்லுடா... தம்பி..>"

பார்வதி (பா): "என்ன நடக்குது இங்கே... முருகா... எங்கே போற... நில்"

மு: "அம்மா... நீங்க எல்லாரும்தான் நில்லு நில்லுன்னு சொல்றீங்க... அப்பாவ பாரு... மூணு கண்ணும் சரக்கு மேலேதான் இருக்கு... இது இனி சரக்கப்பத்தி இல்லை... என் மேல எவ்வளவு அக்கறைன்னு இது காட்டலையா... நான் போரேன்...''

************************************************************************************

இடம்: பழமுதிர்ச்சோலை; சரக்கு காய்ச்சும் கிடங்கு
பார்ட்டீஸ்: முருகன் ... பார்வதியம்மா


பா: "முருகா... என்ன இது... எல்லாத்துக்கும் நான் உன் பின்னாடி வந்து வந்து கதை சொல்ல முடியுமா... நீ என்ன சின்ன பையனா... ஒன்னுக்கு ரெண்டு பிகர கணக்குப் பண்ணி இருக்கே... உங்க அப்பனுக்கே அந்த தைரியம் இல்லாமத்தான் ஒருத்திய ஒளிச்சு வெச்சு இருக்கார்..."

மு: '' அம்மா.. சும்மா அப்பாவ பத்தி கதகதையா சொல்லி என்னை சமாதானம் பண்ணலாம்மு நினைக்காதீங்க... இப்போ எனக்கே தனியா விளையாட்டு எல்லாம் தெரியும்.... சோ அவர் ஆடின விளையாட்டை வாய திறந்துகிட்டு கேட்கிற வயசு இல்ல எனக்கு சொல்லீட்டேன்"

பா: "தெரியும் கண்ணா... எனக்கு அது எல்லாம் போர் அடிச்சுப் போச்சு... பிளாஷ் பேக் சொல்லி சொல்லி ஒரே போர்.... ஆனா எனக்கு எப்பவும் போர் அடிக்காத ஒரு மேட்டர் என்ன தெரியுமா...?"

மு: "என்னதும்மா??"

பா: ''நம்ம செம்பு மன்னன் தான்... எதுக்கெடுத்தாலும் சந்தேகம்... இவன் சந்தேகத்த தீக்குறதுக்கே ஜனங்க தனியா ஒரு வரி கட்டுறாங்கன்னா பாரேன்..."

மு: ''ஹிஹி... அப்படியா... ??"

பா: "என்ன அப்படியாங்குறே... நான் போர் அடிக்கும் போது எல்லாம் லைவ் ஷோவே பாப்பேன்...!! அவ்ளோ ஏன்... இப்போ கூட ஒரு ஷோ இருக்கு... லைவ்... பார்க்கலாம் வா."

மு: "ஓ பார்க்கலாமே... யார் அங்கே ... நான் யூஸ்'ல இருந்து வாங்கிட்டு வந்த மூணு ரிக்லைனர்'ல இருந்து ரெண்ட இங்க போடுங்கப்பா... பிளஸ்... பெப்சி அண்ட் லேஸ் சிப்ஸ்.."

பா: "அது என்னடா...மூணு ரிக்லைனர்...??"

மு: "எத்தனை நாளைக்குத்தான் மயில் மேலையே உக்காந்து இருக்க... பிளஸ் ஒன்னு மட்டும் வாங்கினா ரெண்டு பேரும் மடியிலதான் உட்கார்வாங்க... அதுவும் இப்போ ஒருத்தியும் ஜிம் போறது இல்ல... எதுக்கு ரிஸ்க்கு... அதான் எல்லாருக்கும் தனியா வாங்கிட்டேன்..."

பா: "அறிவுடா உனக்கு... உங்க அப்பன் டப்சா கண்ணுல இருந்து வந்து இருந்தாலும்... எப்படி உனக்கு இவ்ளோ அறிவு..?"

மு: "எல்லாம் கார்த்திகை பெண்கள் கொடுத்ததும்மா..."

பா: "இருக்கும் இருக்கும்!! சரி செம்பு என்ன சீன் போடப் போறான்னு பாக்கலாம் வா"

***********************************************************************************

to be continued............................ :D

Sunday, August 20, 2006

கதை சொல்ல வந்தேன்!!!

வணக்கம் நண்பர்களே,

என்னடா தமிழ் இப்படி கொட்டுது?? பத்தாததுக்கு ஒரே செண்டி செண்டியா பொழியற'ன்னு என்னோட கிலோஸ் பிரண்ட்ஸ் மட்டும் இல்லாம எனக்கு கமெண்ட்ஸ் போஸ்ட் பண்ணின முகம் தெரியாத நண்பர்களும் ஒரே கேள்வி எழுப்ப... அடடா இதே ரேன்ஞ்ல போன நம்ம பிளாக்குக்கு முகாரின்னு பேர் வைக்க வேண்டியது வந்துடுமோன்னு ஒரு பீதி... :)

அதுனால இன்னைக்கு கொஞ்சம் லேச இருக்கட்டுமேன்னு ஒரு கதை... எனக்கு காமெடி எல்லாம் நடைமுறை போச்சுல தான் வரும்... எழுத ஆரம்பிச்ச கொஞ்சம் சீரியஸ் டாபிக்ஸ் தான் எழுதி இருக்கேன்...

என்னோட பழைய போஸ்ட் ஒன்னு.. உங்களோடு பகிர்ந்து கொள்ள... என்னக்கு கதை எழுத வருதான்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா.....

**********************************************************************************

நிறைவு

"ஏண்டி உனக்கு என்ன பைத்தியமா? இந்த சமுதாயம் என்ன சொல்லும்னு கொஞ்சமாவது யோசிச்சியா? இது நடந்தா வெளிய தலை நிமிர்ந்து நடக்கத்தான் முடியுமா??"

"அம்மா... என்னால என் வாழ்க்கையைப் பத்திதான் யோசிக்க முடியும், யோசிக்கனும். சமுதாயத்தப் பத்தி நான் ஏன் கவலைப்படனும்? என்னைப் பெத்தவங்க நீங்க, உங்களுக்கு மரியாதைக் கொடுக்க வேண்டியது என்னோட கடமை. அதான் உங்க கூட இதை பகிர்ந்துக்குறேன். உங்களோட ஆதரவு இல்லைனாலும் பரவா இல்லை... ஆசீர்வாதம் இருந்தா போதும்.."

"அப்போ எங்க அனுமதிகூட வேண்டாம் அப்படித்தானே"

"எதுவும் யாருடைய அனுமதி கேட்டு நடக்குறது இல்லம்மா. பிறப்பு, இறப்பு இதுக்கெல்லாம் அனுமதியா... அப்புறம் கடவுள் எதற்கு?"

"ஓஹோ வேதந்தம் பேசுறியா?"

"அம்மா... நான் இங்க வாதம் பண்ண வரல. என் முடிவு இதுதான்..."

"முடிவே பண்ணியாச்சா? அப்பறம் நாங்க என்ன சொல்ல? என்னங்க கேட்டீங்களா?"

"சரி கொஞ்சம் அமைதியா இரு கௌசல்யா. ஏம்மா லதா, இதுதான் உன்னுடைய முடிவா? நல்லா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தியா?"

"ஏம்ப்பா தப்பா.... ?"

"தப்பா சரியான்னு நீதாம்மா யோசிக்கனும். இந்த முடிவுனால நாளைக்கு உனக்கோ உனக்கு பிறக்கப் போகும் குழந்தைகோ என்ன கஷ்டங்கள் வரும், அதை எப்படி ஃபேஸ் பண்ணப் போற, இதை எல்லாம் யோசிச்சியா?"

"அப்பா... உங்க ஆசீர்வாதம் இருக்குற வரைக்கும் எனக்கு எந்த குறையும் வராதுப்பா"

"ஹம் சரிமா. உன் முடிவு இதுதான்னா என்னுடைய ஆசீர்வாதம், ஆதரவு எல்லாம் உண்டு. கோ அஹெட்"

"அம்மா??"

"லதா எனக்கு உன் சந்தோஷம் உன் நிம்மதி இதுதான் முக்கியம். அதுக்காக நீ என்ன செய்தாலும் ஒரு தாயா என் ஆதரவு என்னைக்கும் உனக்கு உண்டு."

"தேங்ஸ்ம்மா தேங்ஸ்ப்பா. உங்களுக்கு மகளா பிறந்ததுக்கு சந்தோஷப் படுறேன், பெருமையும் கூட. எல்லாப் பெண்களுக்கும் இப்படி அப்பா அம்மா இருந்தா எந்த பொண்ணும் தன் விதியை நினைத்து காலம் முழுக்க கண்ணை கசக்கிக்கிட்டு இருக்க மாட்டா."

===

எல்லாப் பொண்ணுங்களையும் போலதான் லதாவும். படிப்புல இவதான் முதல். ஆட்டம் பாட்டு விளையாட்டு எல்லாத்துலையும். காலேஜ்'லயும் அப்படித்தான். எல்லாம் நாங்க செய்த தப்பு, குமாருக்கு அவளைக் கல்யாணம் பண்ணிவெச்சது.

குமார்... நல்லவன்தான் ஆனா கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகியும் குழந்தை இல்லைன்னு அவங்க அம்மா இவளை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. குமாரும் செக்கப்புக்கு போனான். ரெண்டு பேருக்கும் குறை இல்லைன்னு டெஸ்ட்டு சொன்னாலும் குழந்தை பிறக்கலைனதும் குமாரோட அம்மாவோட பேச்சு எல்லாம் வேற மாதிரிப் போச்சு.

பொருத்துகிட்டுதான் இருந்தா லதா ஆனா கடைசி வரை பேச்சு குறைந்தபாடு இல்லை. அது மட்டும் இல்ல குமாருக்கு வேற கல்யாணம் பண்றதாக் கூட பேசி இருக்காங்க. அதுக்கு குமாரும் எதிர்ப்பு தெரிவிக்காததுனால விவாகரத்துக்கு ஒத்துகிட்டு பிரிஞ்சு வந்துட்டா.

அப்படிப் பிரிஞ்ச அப்பறம் கூட தனியாதான் தங்கி இருக்கா. வேலைக்கு போறா. பெரிய வேலை, கை நிறைய சம்பளம். விவாகரத்து ஆகிடுச்சுன்னு ஒரு நாள் அவ அழுது பாத்தது இல்லை. வேற கல்யாணத்துல அவளுக்கு ஈடுபாடும் இல்லை. மீறி கேட்டா, 'ஏன் ஆண் துணை இல்லாம வாழ முடியாதா?'ன்னு கேக்குறா. முடியாதுன்னு வாதாடினா, 'ஹூம், உன் மாப்பிள்ளையும் ஆம்பளைதான், அவன் என்ன என்னை வெச்சு காப்பாத்தி கிழிச்சுட்டான்... இனி புதுசா ஒருத்தன் வந்து கிழிக்க?'ன்னு கேக்குறா.

ஆனா இப்போ என்ன தோனுச்சோ தெரியல இந்த முடிவுக்கு வந்துட்டா...

===

"டாக்டர்.. இது என் அம்மா. அம்மா, இவங்கதான் டாக்டர் சந்திரா"

"வணக்கம்மா..."

"வணக்கம் டாக்டர். டாக்டர்... இவளோட இந்த முடிவுனால... இவளுக்கு...?''

"கவலைப்படாதீங்கம்மா. இது ஒரு மெடிகல் அட்வான்ஸ்மெண்ட் அவ்ளோதான். வேற எந்த பிரச்சனையும் இதுல இருக்காது. இன்பேக்ட் அந்த பார்டி யாருன்னு இவங்களுக்கோ இல்லை இவங்களைப் பத்தி அவங்களுக்கோ தெரியவே தெரியாது"

"டாக்டர்... இதைப் பத்தி நீங்க அம்மா கிட்ட விவரமா பேசுங்க. நான் செக்கப் எல்லாம் பண்ணிட்டு வரேன்"

"ஓகே லதா... ஆல் த பெஸ்ட்"

===

"லதா செக்கப் எல்லாம் முடிஞ்சுடிச்சு. கங்கிராஜுலேஷன்ஸ் யூ ஆர் வெரி ஹெல்தி அண்ட் பிட் பார் த பிராசஸ்"

"ரொம்ப சந்தோஷம் டாக்டர்... எப்போ ஆரம்பிக்கலாம்?"

"நீங்க எப்போ இதுக்கு ரெடியோ, அன்னைக்கே"

"ஓகே டாக்டர்... வர சனிக்கிழமை வரேன்"

"குட் இனஃப்"

"வரேன் டாக்டர்"

"ஓகே சியூ தென்"

===

விவாகரத்து வாங்கி ரெண்டு வருஷம் ஆகுது. குமாருக்கும் அவன் அத்தை பொண்ணு கமலாவுக்கு அப்போவே கல்யாணம் ஆனதா கேள்வி. இன்னும் அவங்களுக்கும் குழந்தை இல்லையாம்.

"எல்லாம் செஞ்ச பாவம். அதான் வயத்துல ஒரு பூச்சி புளு தங்க மாட்டேங்குது. இந்த தருத்திரத்தைத் தேடிப் பிடிச்சு என் மகனுக்குக் கட்டி வெச்சு அவன் வாழ்க்கையையும் கெடுத்துட்டேனே"

அத்தை பேசியது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

"அம்மா...
உனக்காய்...
உன் நினைவில் கருவாய்...
நான் வாழ்ந்த வாழ்க்கை போதும்..

உன் பூங்கரங்களில்
என்னை அள்ளி நீ கொஞ்ச...
பூரிப்பில் நீ விடும் கண்ணீர்
தரை தொடும் சப்தம்
அதைக் கேட்டுத் தூங்க ஆசையாய்
உன் மகள் வளர்கிறேன்"

என்றோ டைரியில் எழுதியது... இன்று புரட்டிப் பாக்கத் தோன்றியது...

பெண்மையின் முழுமையை உணர்வதில் எந்த பெண்ணுக்குத்தான் கனவுகள் இருக்காது. கண்களைத் திறந்து கொண்டே கனவுகாணத் தொடங்கினேன்.

===

"ஹேய் உங்க அப்பா யாருடா?"

"என்ன அப்பா பேர் தெரியாதா? ஏன் உங்க அம்மா சொல்லவே இல்லையா...?"

"அப்பன் பேர் தெரியாதவனா நீ... ஹஹஹஹ?"

"அம்மா.... அம்மா... எல்லாரும் என் கிட்ட அப்பா யாருன்னு கேக்குறாங்கம்மா... யாரும்மா என் அப்பா? யாரும்மா??"

திடுக்கிட்டுக் கண் திறந்தேன். எதிரில் அப்பா.

"என்னம்மா. உன் மகன் அப்பா யாருன்னு கேக்குறானா. என்ன சொன்ன? நிஜமாவே கேட்டா என்ன சொல்லுவே?"

அமைதியாய் நின்றேன். என்ன சொல்லுவது என்று திணறல் இல்லை. எப்படிச் சொல்லுவது என்ற தேடல்.

"அப்பா... இப்படி ஒரு குழந்தையைப் பெற்று எடுக்குற தைரியம் இப்போ எனக்கு இருக்குன்னா- இதை அவன் கேட்கும் போது சொல்லவும் எனக்கு தைரியம் இருக்கும். எனக்குப் பிறந்த அவனால இதைக் கேட்கவும் புரிஞ்சுக்கவும் தைரியம் இருக்கும். எதுக்காகப்பா நான் பயப்படனும்?"

கண்கள் கலங்கியது அப்பாவிற்கு

===

இன்று சனிக்கிழமை.... கருவுற்றேன்.

எத்தனையோ நாட்கள் அந்த நிலாவைப் பார்த்தது உண்டு. ஆனால் இன்று முதல் முறையாய் அந்தப் பௌர்னமி நிலவைப் பார்த்த போது... போடி! நானும் நிறைந்துள்ளேன் என்று சொல்லத் தோன்றியது.

இதைக் குமாருடன் இருக்கும் போதே செய்து இருக்கலாமே என்று உலகம் பேசியது...

இப்படி வாய்ப்புகள் இருந்தும், குறை இல்லை என்று தெரிந்தும், மறுமணம் செய்ய தடை சொல்லாத ஒரு சுயநலம் பிடித்த படித்த முட்டாளுக்காக... நான் உடல் கொடுத்த என் கருவிற்கு அவன் உயிர் கொடுத்து அதை நான் சுமந்திருந்தாலும் ஒரு நாள் அதில் சந்தேகம், ஒரு கசப்பு பிறக்கும்...

ஆனால் இன்று... என் குழந்தை.. எனக்கே எனக்காய்.... சந்தேகம் இன்றி...

பிறந்தான் பரத்....

இரண்டு வருடங்கள் ஓடின. அவனுக்கு கூட விளையாட தங்கை வேண்டுமாம். தத்தெடுத்தேன் பாரதியை.

ஆஸ்திக்கொன்று... ஆசைகொன்று!!

***********************************************************************************

ஹிஹிஹி... இதுவும் ஹெவி மேட்டர்தான்.... ஆனா கதை!!!

கொஞ்சம் காமெடியா எழுத ஒரு டொபிக் சஜஸ்ட் பண்ணுங்களேன்....

Wednesday, August 16, 2006

புதுக் காதல்!!

அழகினை கடன் வாங்கி
இளமையில் விதைத்து வைத்தேன்
காலமென்னும் கண்ணாடி
முதுமையின் கோடுகள் காட்டுதம்மா

உடல் என்னும் பொய் நம்பி
வண்ண ஆடைகள் நெய்து வைத்தேன்
நிழல் என்னும் நிஜம் தொடர
கண்ட கனவுகள் கருத்ததம்மா

விழி என்னும் வாசல் வழி
அவர் வரவென்னும் தேடல் கொண்டேன்
வழி மாறி போனார் என்று
மண விருந்துண்டோர் சொன்னாரம்மா

உயிரென்றும் ஊனென்றும்
நம் உறவினைக் கண்டு வந்தேன்
வெறும் உடல் என்று எனைப் பிரித்தார்
என் பெண்மை சிறுத்ததம்மா

கலையாத நித்திரையாம்
நான் கொண்ட காதலுக்கு,
இனி புதுக் காதல் சொல்லிடுவேன்
தித்திக்கும் தேன் தமிழில்

தமிழ்மீது நான் கொண்டேன்
தனியாத ஒரு மோகம்
கவிபாடி தேடிடுவேன்
கலப்பியலின் புது இலக்கணம்

-கன்யா

Wednesday, August 09, 2006

அழகிய பெண்ணே

இதுவரை வாழ்ந்த உறவுகளின்
வலிமை தெரியவில்லை
என்றோ விட்டுச் சென்ற வரவுகளின்
வேதனை முடியவில்லை

காதலைக் கண்டிருக்கிறேன்
தோல்வியின் காயங்கள் சுமந்திருக்கிறேன்
காமனின் கலை பயின்று
மோகத்தின் சூது வென்றிருக்கிறேன்

என்னைக் கொண்டவளை
நினைத்து பிரம்மித்திருக்கிறேன்
என்னோடு வந்தவளை
கொண்டாடி மோகித்திருக்கிறேன்

ஆனால் மகளே,
இன்று என்னிரு கரம் கொண்டு
உன்னை ஏந்தி நிக்கையிலே
ஓடும் குருதி அனைத்தும்
உள்ளங்கையில் உருகி நிக்குதடி

கருவாக நீ வளர்கையிலே
முன்னூரு நாள் உன் தாய் பட்ட பாடு
இன்று பற்றிய என் விரலை
நீ விட்ட ஒரு கனத்தில் நான் உணர்ந்தேன்

பிறந்த மருகனமே
பெற்றவளின் மார்பு தெரியும் உனக்கு
ஆனால் கருப்பையுடன் தினம் பேசிய என்னை
உன் தாய் சொல்லித்தான் தெரியுமோ கண்ணே

காலமெல்லாம் கண் விழிப்போன்
கண்மணியே உனைக் காண
இமை மூடும் ஒரு கனத்தில்
தொலைப்பேனோ உன் பிம்பம்

தாயவளின் அழகு கொண்டு
தாமரையாள் மேனி தந்த
உன் அழகைப் பாத்ததும்
சந்திரனும் இருண்டதம்மா

சித்திரமாய் நீ சிரிக்க
விண்மீனும் சிறைபடுமாம்
செவ்விதழ் நீ மலர
குயிலினங்கள் மௌனமாம்

புன்னையிலைப் பாதம் வைத்து
சின்னவள் நீ நடந்து வர
மயிலினங்கள் பறந்ததம்மா
மானினமும் தொற்றதம்மா

மனையாளும் பிறந்த பொன்மகளும்
என் இரு கண்களாய் கொண்டு
இனி காலமெல்லாம் அடைகாப்பேன்
என் மகளே நீ உறங்கு!!

- கன்யா

Sunday, August 06, 2006

சுமக்கும் கனவுகள்

கண்டேனடி நான் கண்டேனடி
காணி நிலமொன்று விளைந்திருக்கக்
கண்டேனடி

சொன்னாரடி பிறர் சொன்னாரடி
அருவடைக் காலம் பிறந்ததென்று
சொன்னாரடி

கொண்டேனடி காதல் கொண்டேனடி
எதிர்காலம் தனைக் கண்டு மையல்
கொண்டேனடி

வெண்பொங்கல் பொங்கி வர
மஞ்சள் காடாய் விளைந்திருக்க
வீதியெல்லாம் தோரணமும்
மங்கலமாய் ஒலி முழங்க

கஜபதியான் பன் னீர்தெளிக்க
கலைவேந்தர் இசை வெதும்ப
மக்கட்கெல்லாம் விருந்தோம்ப
பட்டும் பொன்னும் பவனி வர

காலத்தை கனித்து சுப முகூர்த்தம் குறித்து
வேதம்தனை ஓதி மேலோர் ஆசி கூற
மன்னவனாம் அய்யன் தம்கரம் பற்றி
மணநாள் கொண்டு மலரக் கனாகண்டேன்

**************************************************************
இயற்கையின் பெண்மையை மோகம் தீண்டிச் செல்ல
குளிர் தென்றல் வந்து அள்ளி முத்தமிட்டு தணிக்க
இட்ட முத்தத்தின் ஈரம் பனித்துளியாய் உறைந்திருக்க
அதை மாலையாய் கோர்த்து இரவெல்லாம் எண்ணியிருந்தாள்

ஆதவனின் கதிர் எழும்பி துளைத்ததும்
உடைந்த முத்துக்களை தொலைத்த துயரம் வாட்ட
இனி காதலன் சபரிசம் வேண்டி
அவள் கொண்ட பசலைநோய் என்னவென்று சொல்வதம்மா

நானும் அவளைப் போல் கன்னியன்றோ
கண்களில் நான் வாங்கி வந்த சாபம்
கனவுகளாய் என் இரவுகளைச் சுட
உரக்க ஒலித்த நிசப்த்தம் என் துயில் கொண்டு சென்றது

உன் நினைவுகளில் ஒருகனம் இன்புற்றிருக்க
மருகனம் ஏனோ இந்த இளமை கணத்தது
கொண்ட காதலை நெஞ்சம் சுமக்கையிலே
இந்த கனவுகளை சுமப்பது வலித்திடுமோ!!

-கன்யா