Wednesday, February 29, 2012

கலைந்த கனா

கனவொன்று கண்டேன்
அதில் நான் கரையக் கண்டேன்
இப்படி ஒரு கனவென்றால்
எப்படி கண் விழிப்பேன்

கருவறையின் இருட்டில்
சிறிதாய் ஓர் ஒளி கண்டேன்
என் இதயத்தோடு ஒன்றாய்
கூடித் துடிக்கும் இருநாடி கேட்டேன்

வளராத வயிற்றை கூட
மெதுவாய் தடவிப் பார்த்தேன்
கேளாத மழலையில்
அம்மா என்று ஒரு மொழி கேட்டேன்

விடிந்ததும் கலைந்த
என் கனவே
இனி உன்னை சுமக்க
எத்தனை கனவுகள் வேண்டுவேன்

-- கன்யா

Tuesday, January 24, 2012

2012 என்ன வேண்டும்

அழியும் காலம் அருகிலென்று
ஆய்வளர் அறிந்ததொரு விதம்
அழியா அழகுகள் பலகோடி இருந்தும்
நாம் ஆண்டதென்ன சதம்

ஆண்டுகள் பல கரைய விட்டு
நான் சுவாசித்தும் மரித்திருந்தேன்
இனி இந்த ஆண்டு விடியாதெனில்
சில நாட்கள் வாழ்ந்து கரைத்திடுவேன்

உதிக்கும் சூரியன், உறைந்த பனித்துளி
மெதுவாய் உரசும் தென்றல், சுகமாய் தழுவும் மழைத்துளி
ஓடும் காட்டருவி, உயர்ந்த பனிமலை
உச்சியில் தவழும் வென்மேகம், இரவில் முகம் காட்டும் முழு நிலா

இனிதாய் பாடும் பூங்குயில், அழகை ஆடும் பொன்மயில்
வாலை ஆட்டும் நாய்க்குட்டி, காலை சுற்றும் பூனை
மலர்களின் வாசம், மான்களில் வேகம்
மடியை முட்டும் கன்று

இவை எல்லாம் ஒரு நொடி என் விழிகளில் நிறைத்து
நினைவுகளில் பதிக்க வேண்டும்

மறக்க நினைக்கும் மனிதரை எல்லாம்
மன்னிக்க சில நாட்கள் வேண்டும்
என்னை அறவே வெறுத்த அன்பரை எல்லாம்
அணைக்க சில நாட்கள் வேண்டும்

மறந்து போன மழலை நினைவுகளில்
களிக்கச் சில காலம் வேண்டும்
நான் கூடிச் சிரித்த நண்பரை எல்லாம்
சந்திக்கச் சில காலம் வேண்டும்

காதலில் விழுந்து களவியல் அறிந்து
காமனை வென்ற கர்வம் வேண்டும்
தாய்மையைச் சுமந்து பிறப்பை சுகித்து
சிரித்து அழுதிடும் அனுபவம் வேண்டும்

எல்லாம் கண்டு எல்லாம் வென்று
என் தாயின் மடியில் தலையினைச் சாய்த்து
விடியாத இரவை, உதிக்காத சூரியனை
மறித்தும் வென்றிட இன்னும் ஒரு நொடி வேண்டும்

Saturday, January 21, 2012

காதல்

காணும் இடமெல்லாம் அவனைக்
காணக் காத்திருக்கும் கண்களை
பேசும் மொழி எல்லாம் அவன்
இதல்வழிக் கேட்கக் கெஞ்சும் காதுகளை

துவர்க்கும் சுவை எல்லாம் அவனை
நினைத்தே இனிக்கும் உதடுகளை
நெருங்கும் நொடிகளில் அவன்
தோழ் சாயத் தள்ளும் கால்களை

மெதுவாய் சபித்துக் கொண்டிருகிறது
அவனுக்காக எனக்கே தெரியாமல் துடிக்கும்
என் இதயம்

- கன்யா